

பிரதமர் மோடி
புதுடெல்லி: இந்தியப் பிரிவினையின்போது நிகழ்ந்த வன்முறைகள், உயிரிழப்புகள் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வு துயரங்களை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ம் தேதி பிரிவினை கொடுமை நினைவு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: பிரிவினை கொடூர நினைவு தினமான இன்று, நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களின் மன உறுதியையும் தியாகத்தையும் நினைவுகூர்கிறோம்.
தாயகப் பிரிவினையின்போது சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்தபோதிலும், மீண்டெழுந்து நின்று மீண்டும் வாழ்க்கையைக் கட்டமைத்த மனிதர்களின் தியாகம் மற்றும் தீரத்தை இந்தத் தேசம் என்றும் மறவாது.
வரலாற்றின் அந்தப் பேரவலத்தில் தங்களது உயிர்களை நீத்தவர்களுக்கும், வாழ்வாதாரங்களை இழந்து புலம் பெயர்ந்தவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.