பிரிக்ஸ் தருணங்கள்: பிரதமர் மோடியுடன் மலேசியா, வியட்நாம், எத்தியோப்பிய பிரதமர்கள் சந்திப்பு

பிரதமர் மோடியைச் சந்தித்த வியாட்நாம், மலேசியா பிரதமர்கள்

பிரதமர் மோடியைச் சந்தித்த வியாட்நாம், மலேசியா பிரதமர்கள்

Updated on
2 min read

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாரத் மண்டலத்தில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை மலேசியா, வியாட்நாம், எத்தியோப்பிய பிரதமர்கள் சந்தித்துப் பேசினர்.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்கள்: பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று (செப்.12) டெல்லியில் தொடங்கியது. அதில் இந்திய பிரதமர் மோடியை மலேசியா, வியாட்நாம், எத்தியோப்பியா நாடுகளின் பிரதமர்கள் சந்தித்துப் பேசினர்.  

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான சந்திப்பின் போது, அவரை இந்தியாவுக்கு வரவேற்ற பிரதமர் மோடி, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒரு கூட்டாளியாக மலேசியா பங்கேற்பதற்கு தனது பாராட்டையும் தெரிவித்தார். தொடர்ந்து பிப்ரவரியில் பிரதமர் மோடியின் மலேசிய பயணத்தின் பலன்களை ஆய்வு செய்த இருநாட்டுத் தலைவர்களும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, செமி கண்டக்டர், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், எரிசக்தி, நிதித் தொழில்நுட்பம், கல்வி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் ஆய்வு செய்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, மலேசியாவின் சபா மாகாணத்தின் கோட்டா கினபாலு பகுதியில் இந்தியத் துணைத் தூதரகம் அமைப்பதற்கு மலேசியாவின் ஒப்புதலை அந்நாட்டு பிரதமர் வழங்கினார்.

பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் தங்களின் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா - மலேசியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் தங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

அப்போது, ஆசியான் - இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் மலேசியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

அதேபோல், வியாட்நாம் பிரதமர் லே மின் ஹங்க் உடனான சந்திப்பின்போது, வியாட்நாம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒரு கூட்டாளியாக பங்கேற்பதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், வியட்நாம் சோசலிஸ்ட் குடியரசின் அதிபருமான  டோ லாம், இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது, மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திசார் ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிராந்திய, உலகளாவிய பிரசினைகள் குறித்து இரண்டு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

இந்தியாவும் வியட்நாமும், பகிரப்பட்ட நாகரிகப் பாரம்பரியம், பரஸ்பர நம்பிக்கை, புரிதல் ஆகியவற்றில் வேரூன்றிய, காலத்தால் மாறாத நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன. வியட்நாம், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் ஒரு முக்கியத் தூணாகவும், தென்கிழக்கு ஆசியப் பகுதியுடனான இந்தியாவின் பரந்த ஈடுபாட்டில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் நாடாகவும் விளங்குகிறது.

அதேபோல் எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி உடனான சந்திப்பின் போது இருதரப்பு உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் கலந்துரையாடினர். பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு, திறன் மேம்பாடு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்தனர்.

2025-ம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிஸ் அபாபாவுக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு அமைந்தது.

இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, சர்வதேச நிகழ்வுகள் குறித்து தங்களது கண்ணோட்டங்களைப் பரிமாறிக் கொண்டனர். பலதரப்பு மன்றங்களில் நெருங்கிய ஒத்துழைப்புக்கான தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் எத்தியோப்பியா பங்கேற்றதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்ததோடு, அதன் பங்கேற்பு உலகத் தெற்கு நாடுகளின் குரலை வலுப்படுத்த உதவும் என்று குறிப்பிட்டார்.

<div class="paragraphs"><p>பிரதமர் மோடியைச் சந்தித்த வியாட்நாம், மலேசியா பிரதமர்கள்</p></div>
பிரிக்ஸ் உச்சி மாநாடு கவனத்தை ஈர்த்த ‘நமஸ்தே தாமரை’ சின்னம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in