பிரதமர் மோடியின் 2 மணி நேர யுஏஇ பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடியின் 2 மணி நேர யுஏஇ பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
Updated on
1 min read

அபுதாபி (யுஏஇ): இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பெட்ரோலியம், எல்பிஜி விநியோகம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்றார்.

முதலில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்தார். அப்போது, இரு நாட்டு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குறிப்பாக, இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கட்டமைப்பு ஒப்பந்தம், பெட்ரோலிய இருப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், எல்பிஜி விநியோகம் தொடர்பான ஒப்பந்தம், குஜராத்தின் வதினார் பகுதியில் கப்பல் பழுதுபார்க்கும் மையத்தை அமைப்பதறகான ஒப்பந்தம், ஆர்பிஎல் வங்கி மற்றும் சம்மன் கேப்பிட்டல், இந்தியன் இன்பராஸ்ட்ரக்சர் ஆகியவற்றில் 5 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரண்டு மணி நேர குறுகிய பயணமாகச் சென்ற பிரதமர் மோடி, ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை அடுத்து அங்கிருந்து நெதர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

மே 15 முதல் 17 வரை நெதர்லாந்து, மே 17 முதல் 18 வரை ஸ்வீடன், மே 19-ல் நார்வே ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் மோடி, அந்நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், நார்வேயில் இந்தியா - நார்வே இடையேயான மூன்றாவது உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இதையடுத்து, பிரதமர் மோடி இத்தாலி செல்கிறார்.

பிரதமர் மோடியின் 2 மணி நேர யுஏஇ பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
“மோடி அரசின் தவறுக்காக மக்கள் விலை கொடுப்பதா?” - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in