“இந்தியா - நியூசிலாந்து உறவின் தூணாக இந்திய வம்சாவளியினர்” - பிரதமர் மோடி புகழாரம்

“இந்தியா - நியூசிலாந்து உறவின் தூணாக இந்திய வம்சாவளியினர்” - பிரதமர் மோடி புகழாரம்
Updated on
1 min read

ஆக்லாந்து: இந்தியா - நியூசிலாந்து உறவின் தூணாக இந்திய வம்சாவளியினர் உள்ளதாக ‘கியா ஓரா மோடி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று நியூசிலாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டில் உள்ள இந்தியர்களை சந்திக்கும் ‘கியா ஓரா மோடி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் பங்கேற்றார்.

மிகுந்த உற்சாகத்துடன் ஆரவாரம் செய்த 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நியூசிலாந்தில் உள்ள இந்திய சமூகம் எனக்கு அளித்த சிறப்பு வரவேற்புக்கு நன்றி. உறுதி, கடின உழைப்பு, விடாமுயற்சியின் மூலம் இந்திய சமூகம் நியூசிலாந்தின் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்து, ஒரு ஆற்றல்மிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது.

இந்திய சமூகத்தினர் தங்கள் கலாச்சாரம், விழாக்கள், மரபுகளைப் பாதுகாத்து, நியூசிலாந்தின் பன்முக கலாச்சாரக் கட்டமைப்பை வளப்படுத்தி வருகின்றனர். அதற்காக நான் அவர்களை பாராட்டுகிறேன். குறிப்பாக, தன்னார்வத் தொண்டு, சமூக நலன் ஆகியவற்றில் இந்தியச் சமூகம் அளித்து வரும் பங்களிப்புகள் மகத்தானவை.

இந்தக் கூட்டம் இந்திய வம்சாவளியினருக்கானதாக இருந்தாலும், இது உண்மையில் இந்தியா - நியூசிலாந்து நட்புறவு, விளையாட்டுத் தொடர்புகள், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றின் கொண்டாட்டமாகும்.

2026-ம் ஆண்டு, இரு நாடுகளின் விளையாட்டு ஒத்துழைப்பில் 100-வது ஆண்டு. இரு நாடுகளும் தங்களது விளையாட்டுத் தொடர்புகளை மேலும் ஆழப்படுத்த ஆர்வமாக உள்ளன. உள்ளூர் மாவோரி கலாச்சாரத்தின் அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான அணுகுமுறை பாராட்டுக்குரியது. இந்தியாவும் பாரம்பரியத்தை வளர்ச்சியுடன் இணைக்கும் ஒரு வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து உறவின் தூணாக இந்திய வம்சாவளியினர் உள்ளனர். இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நட்பு, நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் பாலமாகத் தொடர்ந்து பணியாற்றி, இரு நாடுகளின் நலனுக்காக இந்த உத்திசார் ஒத்துழைப்பின் முழு ஆற்றலையும் வெளிக் கொண்டுவர இந்திய சமூகத்தினர் உதவ வேண்டும்” என்று பேசினார்.

“இந்தியா - நியூசிலாந்து உறவின் தூணாக இந்திய வம்சாவளியினர்” - பிரதமர் மோடி புகழாரம்
வியட்நாமில் படகு கவிழ்ந்து 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in