

அகமதாபாத்: தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட உலக நாடுகள் இணைய வேண்டும் என ஜெர்மனி பிரதமர் மெர்ஸும், பிரதமர் மோடியும் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி பிரதமர் பிரட்ரிக் மெர்ஸ் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அகமதாபாத் விமான நிலையம் வந்த அவருக்கு அரசு உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பிரதமரான பிறகு அவர் ஆசியாவுக்கு பயணம் செய்திருப்பது இதுதான் முதல்முறை.
கடந்த 10 மற்றும் 11 தேதிகளில் குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலின் பெருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், அகமதாபாத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட சபர்மதி ஆசிரமத்துக்கு நேற்று காலையில் பிரதமர் மோடி சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸை வரவேற்றார். பின்னர் இருவரும் அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, ஆசிரமத்தில் உள்ள ‘சர்க்கா’ எனப்படும் நூற்பு சக்கரத்தைப் பயன்படுத்தி கதர் நூல் எவ்வாறு நெய்யப்படுகிறது என்பதை மெர்ஸ் பார்வையிட்டார்.
ஆசிரமத்தில் உள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் மெர்ஸ் எழுதிய குறிப்பில் “சுதந்திரத்தின் மீதான நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு தனிமனிதனின் கண்ணியம் குறித்த மகாத்மா காந்தியின் அசைக்க முடியாத நம்பிக்கை இன்றும் நமக்கு ஊக்கமளிக்கிறது. காந்தியின் போதனைகள் முன் எப்போதையும் விட இன்று உலகுக்கு அதிகம் தேவைப்படும் நிலையில், இந்த மரபு இந்தியர்களையும் ஜெர்மானியர்களையும் நண்பர்களாக ஒன்றிணைக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
பட்டம் விடும் திருவிழா: பின்னர் இரு தலைவர்களும் சபர்மதி நதிக்கரைக்குச் சென்றனர். அங்கு பிரதமர் மோடி சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா-2026-ஐ தொடங்கி வைத்தார். பின்னர் அதிபர் மெர்ஸுடன் இணைந்து பட்டம் பறக்கவிட்டு மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியும், ஜெர்மன் பிரதமர் பிரட்ரிக் மெர்ஸும் சந்தித்துப் பேசினர்.
அப்போது ரஷ்யா-உக்ரைன் மோதல், காசா நிலைமை மற்றும் பிற உலகளாவிய சவால்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண்பதையே இந்தியா எப்போதும் ஆதரிக்கிறது என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, கல்வித் துறையில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கு ஒரு விரிவான திட்டத்தை வகுத்தனர். குறிப்பாக ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது வளாகங்களைத் திறக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
தீவிரவாதம் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். அப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல், டெல்லி கார் குண்டு வெடிப்பு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் தீவிரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் ஒரு கடுமையான அச்சுறுத்தல் என்பதில் தானும் மெர்ஸும் உடன்படுவதாக மோடி கூறினார்.
இந்தியாவும் ஜெர்மனியும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒற்றுமையாக நிற்கும் என்றும் உலக நாடுகளும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து, இரு தலைவர்களும் இந்தியா-ஜெர்மனி கார்ப்பரேட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள் மன்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.