

தாவூத் இப்ராஹிம் (இடது), லாரன்ஸ் பிஷ்ணோய் (வலது)
புதுடெல்லி: மும்பையில் நிழல் உலக தாதாவாக கருதப்பட்டவர் தாவூத் இப்ராஹிம். இவரது நடவடிக்கைகள் ‘டி கம்பெனி’ என்றழைக்கட்டது. அதற்குப் பதிலாக இப்போது சர்வதேச குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோய் (33) பாலிவுட்டின் நிழல் உலக தாதாவாக திட்டமிடுகிறார்.
மும்பையின் ஆரம்பகால தாதாக்களாக இருந்தவர்கள், கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் ஆகியோர். இவர்களில் ஹாஜி மஸ்தானும், வரதராஜ முதலியாரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பின், தாவூத் இப்ராஹிம் என்ற புதிய பெயர் உருவெடுத்தது.
தாவூதின் ஆதிக்கம் கடந்த 1980 முதல் 1990 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் மும்பையில் பாதாள உலகத்தின் மீதான அச்சம் பரவத் தொடங்கியது. இந்நகரின் தொழிலதிபர்கள், கட்டுமான நிறுவன உரிமையாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் கூட அன்றாடம் தாவூதின் கும்பல்களின் மிரட்டல்களுக்கு ஆளாகினர்.
டி-கம்பெனி காலகட்டத்தில் மும்பையில் பெரிய தாக்குதல்களும் நடந்தன. ஆகஸ்ட் 12, 1997-ல், 'டி-சீரிஸ்' கேசட்டுகள் நிறுவனத்தின் நிறுவனர் குல்ஷன் குமார், மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டு மார்ச் மாதம் திரைப்படத் தயாரிப்பாளர் முகேஷ் துக்கல் படுகொலை செய்யப்பட்டார். ஜூலையில் பாலிவூட்டின் பிரபல இயக்குநர் ராஜீவ் ராய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜனவரி 2000-ல், திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ராகேஷ் ரோஷன் தனது அலுவலகத்திற்கு வெளியே சுடப்பட்டார், ஆனால் அவர் உயிர் பிழைத்தார். அக்காலகட்டத்தில், மும்பையில் வெறும் கடத்தல், மதுக் கடத்தல் மற்றும் சூதாட்டத்தோடு நின்றுவிடவில்லை. மிரட்டிப் பணம் பறித்தல், கூலிப்படை கொலைகள், நில அபகரிப்பு மற்றும் பாலிவுட்டில் தலையீடு உள்ளிட்ட குற்றச் செயல்களில் டி- கம்பெனி ஈடுபட்டிருந்தது.
இதனால், தாவூதின் செல்வாக்குடன் சோட்டா ராஜன், சோட்டா ஷகீல், அபு சலீம் என்று எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள்1990-களில், பகல் வெளிச்சங்களிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களாகின. இதன் காரணமாக, மும்பையின் சட்டம்-ஒழுங்கு நிலைகுலையும் அளவில் காவல்துறையினருக்கு பெரும் சவாலானது.
இவை பாலிவுட் படங்களின் கதைகளுக்கு கருவாகவும் உருவாகி ஹிட் அடித்தன. 1993-ல் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு, காவல்துறை நிழல் உலகத்தின் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். இதன் விளைவாக, பல முக்கிய குற்றக் கும்பல்கள் பலவீனமடைந்தாலும், தாவூத் இப்ராஹிமின் ஆதிக்கம் தொடர்ந்தது.
தாவூதின் 'டி-கம்பெனி', திரைப்படத் துறையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு கட்டத்தில், எந்தப் படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்க வேண்டும், படம் எப்போது வெளியாக வேண்டும், படத்தின் வருவாயில் தம் பங்கு என்ன என்பதையும் தாவூதும் அவனது கும்பலுமே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது. திரைப்படங்களில் பெரும் லாபம் கிடைப்பதைக் கண்ட டி-கம்பெனி அதில் முதலீடும் செய்யத் தொடங்கியது.
மும்பையில் 1993-ல் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பின், தாவூத் இந்தியாவை விட்டுத் தப்பிச் செல்ல தாவூத்தின் குடும்ப உறுப்பினர்களும் கூட்டாளிகளும் மும்பையில் தொடர்ந்து செயல்பட்டனர். இவர்கள் மீது பல குற்றச் செயல்கள் தொடர்பாகக் காவல் துறையில் வழக்குகள் பதிவாகின.
காவல்துறையின் கைதுகளால் தாவூதின் வழியில் இதர சில முக்கிய தாதாக்களும் இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றனர். பழைய குற்றக் கும்பல்கள் முன்பைப் போல வெளிப்படையாகச் செயல்பட முடியாத சூழல் உருவானது. சோட்டா ராஜன், சோட்டா ஷகீல் மற்றும் தாவூத் இப்ராஹிம் ஆகியோரின் வலைப்பின்னல்களுக்குத் திரைப்படத் துறையின் மீது இருந்த பிடி, தளரும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், மும்பையின் பாலிவூட்டில் ஒரு கும்பல் தலை எடுக்கத் துவங்கி உள்ளது. இது 'எல்-கம்பெனி' என்றழைக்கப்படும் லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல்.
பஞ்சாபில், ஒரு கல்லூரியில் பயின்று வந்த இளைஞர்கள் தான் இந்த லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார். இவர்கள், 2012 இல் படிப்பை முடித்து, மாணவர் அரசியலில் தங்கள் ஆதிக்கத்தை தொடர ஒரு கும்பலை உருவாக்கினர்.
பிறகு, கல்லூரித் தேர்தல்கள் மற்றும் உள்ளூர் மோதல்களின் பின்னணியில் லாரன்ஸ் குற்ற உலகிற்குள் நுழைந்தான். தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளுக்காக லாரன்ஸ் பலமுறை சிறைக்குச் சென்றான். 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறையில் இருந்த லாரன்ஸ், அங்குள்ள பிற முக்கியக் குற்றவாளிகள், கும்பல் தலைவர்கள் மற்றும் ஆயுதக் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான்.
சிறையில் இருந்தபோதுதான் லாரன்ஸ் தனது கும்பலை மேலும் விரிவுபடுத்தினான். அவனது கும்பல் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொழிலதிபர்கள், மதுபான வணிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்து மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்கியது. அவனது கும்பல் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொழிலதிபர்கள், மதுபான வணிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்து மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்கியது.
சர்வதேசக் குற்றங்கள்
கோல்டி பிரார், காலா ஜதேரி, ரோஹித் மற்றும் அன்மோல் பிஷ்னோய் போன்ற கூட்டாளிகளின் உதவியுடன், தனது கும்பலை ஒரு சர்வதேச குற்றங்களின் அமைப்பாக மாற்றினான். அமெரிக்கா, கனடா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் குற்றம் செய்ததாக, லாரன்ஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கலாகி உள்ளது.
ஆயுதம், போதைப் பொருட்கள் கடத்தல்
ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் அவன் பல கோடிகளைச் சம்பாதித்தான். ஆகஸ்ட் 2023 முதல், லாரன்ஸ் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு காரணங்களுக்காக, மத்திய உள்துறை அமைச்சகம், பாரதிய நியாய சன்ஹிதா விதிகளின்படி பிரிவு 268, பிரிவு 303 இல் அவனது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.
பாலிவுட்டை மிரட்டும் லாரன்ஸ்
இதன் காரணமாக, லாரன்ஸ் சிறையை விட்டு வெளியேற முடியாது. நீதிமன்ற விசாரணைகளில் காணொளி வாயிலாகவே பங்கேற்கிறான். இருப்பினும், அவன் தன் கும்பலை சிறையிலிருந்தபடி செயல்படுத்துவதாகக் கூறப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளாக, மும்பை பாலிவூட்டின் நட்சத்திரங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.
லாரன்ஸ் குறியில் சல்மான் கான்
இத்துடன் பணம் பறிக்கும் செயல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயர் அடிபடுகிறது. குறிப்பாக, 2013 இல் நடிகர் சல்மான் கானை குறி வைக்கப்பட்ட பிறகு, லாரன்ஸ் கும்பல் பாலிவுட்டின் குற்றச் செயல்களுக்கும் அறியப்பட்டது. மீண்டும் ஏப்ரல் 2024 இல் சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது.
என்சிபி தலைவர் பாபா சித்திக்கீ பலி
அக்டோபர் 2024 இல் முன்னாள் அமைச்சரும் என்சிபி கட்சி தலைவருமான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார். சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்த காரணத்தாலேயே பாபா சித்திக்கீ இலக்கு வைக்கப்பட்டதாக மும்பை காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ரோஹித் ஷெட்டி
மேலும், பிப்ரவரி 2026 இல் திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் ஜுஹு இல்லத்திற்கு வெளியேயும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடைசியாக அக்டோபர் 18, 2026 அன்று, மும்பையின் ஜூஹு பகுதியில் நடிகர் டைகர் ஷெராப் குறிவைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் மீதான கேள்வி
இந்தத் தாக்குதல்கள் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளன. லாரன்ஸ் பிஷ்னோய், பாலிவுட்டில் அச்சத்தை விதைத்து, தாவூதின் டி-கம்பெனியைப் போல் எல்-கம்பெனியை
நிலைநாட்ட முயற்சிக்கிறானா? என்பதே அது. ஏனெனில், துப்பாக்கிச் சூடுகள் நடத்தி பாலிவூட்டை மிரட்டி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பணம் பறிக்க முயல்வதாகப் புகார்கள் உள்ளன.
காவல்துறையின் கவனம்
இது நடந்துவிடக் கூடாது என்பதில் மும்பை காவல்துறை அதிக கவனம் காட்டுகிறது. எனவேதான், ஷெராப் சுடப்பட்டதில் அடுத்தடுத்து ஒன்பது பேர் கைதாகினர். தாவூத் மற்றும் லாரன்ஸின் இரு காலகட்டங்களுக்கும் இடையே சில அம்சங்கள் வேறுபட்டதாகத் தோன்றினாலும், அவற்றின் வலையமைப்புகளும், செயல்பாட்டு முறைகளும் ஒரே மாதிரியாகவே காணப்படுகின்றன.
எல்-கம்பெனிக்கு முயற்சியா?
இது மும்பையில் எல்-கம்பெனி அமைக்கும் முயற்சியா? எனும் கேள்வியும் எழுப்புகிறது. மும்பை காவல்துறையின் 2026 இல் ஒரு புள்ளிவிவரம் வெளியானது. இதன்படி 2024 இல் 199 என்றிருந்த மிரட்டிப் பணம் பறித்தல் வழக்குகள், 2025 இல் 314 என உயர்ந்துள்ளன. எனவே, மும்பையில் பிஷ்னோய் கும்பலின் ஆதிக்கம் அதிகரிப்பதை மறுக்க முடியாமல் உள்ளது.