

புதுடெல்லி: உ.பி. மாநிலம் வாராணசியில், 15 ஏக்கர் பரப்பளவில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பதியின் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலை பல்வேறு மாநிலங்களில் நிறுவ திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், அசாமின் குவாஹாட்டி, மகராஷ்டிராவின் பாந்த்ரா, பிஹாரின் பாட்னா, கர்நாடகாவின் பெலகாவி உள்ளிட்ட இடங்களில் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலின் அமைப்பு, வழிபாட்டு முறைகளின்படியே இக்கோயில்கள் உருவாக்கப்படவுள்ளன. தங்கும் வசதி, பிரசாத விநியோகம் மற்றும் 24 மணி நேர இலவச உணவு போன்ற வசதிகளும் இதில் இடம்பெறவுள்ளன. இதற்காக அந்தந்த மாநில அரசுகள் நிலம் வழங்கும் நடைமுறை தொடங்கியுள்ளதாக கடந்த 2026 ஜனவரியில் தகவல் வெளியானது.
அந்த வகையில், உ.பி.யின் வாராணசியிலும் 15 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீவெங்கடேஸ்வரர் கோயில் கட்டப்பட உள்ளது. இதன் பலனாக, திருப்பதி பாலாஜியை தரிசிக்க காசிவாசிகள் 1,800 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியதில்லை எனக் கருதுகின்றனர்.
இதற்காக டோம்ரி மற்றும் ராம்நகர் பகுதிகளின் கங்கைக் கரையில் நிலம் தேடப்பட்டு வருகிறது. அடுத்த வாரம், சாத்தியமான இடங்களைப் பார்வையிட திருமலை திருப்பதி தேவஸ்தான குழுவினர் வாராணசிக்கு வருகை தரவுள்ளனர். அதன் பிறகு நிலம் தேர்வு செய்யப்படும்.
இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறும்போது, “இத்திட்டம் கோயில் கட்டுமானத்துடன் மட்டும் நின்றுவிடாது. இக்கோயில் வளாகத்தை பக்தர்களுக்கான ஒரு முக்கிய ஆன்மிக மற்றும் சேவை மையமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மருத்துவமனையும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக உணவு, பிரசாதம், தங்குமிடம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கான வசதிகளும் உருவாக்கப்படவுள்ளன” என்றனர்.