

புதுடெல்லி: தாய்லாந்தின் புகெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவத்தில், முதன்மை விமானி கஞ்சா போதையில் இருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையின்போது அவரால் நேராக நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி 137 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்களுடன் தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி ‘ஏஐ-2379’ எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது நடுவானில் திடீரென 300 அடி உயரத்துக்கு விமானம் சட்டென்று கீழே இறங்கியது. இதில், நிலை தடுமாறியதில் 20 பயணிகளும் 4 விமானப் பணியாளர்களும் காயமடைந்தனர்.
இதுகுறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) விசாரணை நடத்தி வருகிறது. விமானிக்கு நடத்தப்பட்ட இரண்டுகட்ட மருத்துவப் பரிசோதனைகளிலும் விமானியின் உடலில் கஞ்சா பயன்படுத்தியதற்கான சான்றுகள் உறுதியாகியுள்ளன. விமானம் ஆபத்து எச்சரிக்கை ஒலித்தபோது, முதன்மை விமான ஓட்டி காக்பிட் தரையில் உட்கார்ந்த நிலையில் இருந்துள்ளார்.
விபத்துக்குப் பிறகு பயணிகள் காயமடைந்தது குறித்துப் பார்க்க வந்தபோது், ஒரு காலில் ஷூ மற்றும் சாக்ஸ் எதுவுமின்றி வந்துள்ளார். தன்னை்யாரும் வீடியோ எடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த பைலட்டால் நேராக நிற்கக்கூட முடியவில்லை.
சோதனைக்காக சிறுநீர் மாதிரி அளிக்கும்போதுகூட புலனாய்வு அதிகாரியின் உதவியுடனேயே அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புகெட்டில் தங்கியிருந்த 24 மணி நேரத்திற்குள் விருந்துக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் கஞ்சா புகை்த்ததாக சக ஊழியர் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.