நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்றது. மக்களவை, மாநிலங்களவையில் மொத்தம் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 19-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் அணுசக்தி மசோதா, இந்திய உயர்கல்வி ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, கார்ப்பரேட் சட்டத் திருத்த மசோதா, பத்திர சந்தை குறியீடு மசோதா, மணிப்பூர் ஜிஎஸ்டி திருத்த மசோதா, அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா காப்பீட்டு திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டம்: கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு சார்பில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை வகித்தார்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜுன் ராம் மேக்வால், ஜே.பி.நட்டா, எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகோய், பிரமோத் திவாரி, டி.ஆர்.பாலு (திமுக), தம்பிதுரை (அதிமுக), கல்யாண் பானர்ஜி (திரிணமூல்), ராம் கோபால் யாதவ் (சமாஜ்வாதி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியபோது, ‘‘நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக, ஆக்கப்பூர்வமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய் கூறியபோது, ‘‘டெல்லி குண்டு வெடிப்பு, தேசப் பாதுகாப்பு, எஸ்ஐஆர் பணி, வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வது, டெல்லி காற்று மாசு உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினோம். பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் உள்ளன. எங்களது கோரிக்கைகளை ஒருமித்த குரலில் வெளிப்படுத்துவோம்’’ என்றார்.

‘‘எஸ்ஐஆர் பணி குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன’’ என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது ‘டிட்வா’ புயல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in