காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: வழக்கற்றுப்போன மற்றும் காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்ய அல்லது திருத்தக் கோரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ரத்து மற்றும் திருத்த மசோதா 2025, மாநிலங்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ‘‘காலாவதியான சட்டங்களை நீக்குவது, சட்டமியற்றும் செயல்பாட்டின்போது ஏற்பட்ட பிழைகளை சரிசெய்வது மற்றும் சில சட்டங்களில் உள்ள பாகுபாடுகளை அகற்றுவதே இந்த மசோதாவின் நோக்கம்.

வணிகம் செய்வதை எளிதாக்குவதுடன் வாழ்வை எளிதாக்குவதற்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். சட்டங்கள் வழக்கற்றுப் போனால் அவற்றை ரத்து செய்ய அரசாங்கம் சட்டம் கொண்டு வரும்.

1925-ம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அப்போதைய சென்னை, பம்பாய், கல்கத்தா மாகாணங்களில் ஓர் இந்து, பவுத்தர், சீக்கியர், சமணர் அல்லது பார்சி இனத்தவர் உயில் எழுதினால், அது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த விதி முஸ்லிம்களுக்குப் பொருந்தாது. சாதி, மதம் மற்றும் பாலின பாகுபாடுகள் அரசியலமைப்பில் தடுக்கப்பட்டுள்ளன. அப்படி எனில், இது ஏன் முஸ்லிம்களுக்கு பொருந்தாது? இந்த சீர்திருத்தங்கள் காலனித்துவ மனநிலையில் இருந்து விடுதலை நோக்கிய ஒரு படி.

இந்த மசோதா, இந்திய டிராம்வேஸ் சட்டம் 1886, சர்க்கரை விலை சமன்பாட்டு நிதிச் சட்டம் 1976, பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (ஊழியர்களின் சேவை நிபந்தனைகளைத் தீர்மானித்தல்) சட்டம் 1988 உள்ளிட்ட சட்டங்களை ரத்து செய்ய முயல்கிறது.

மேலும், பொதுப் பிரிவுகள் சட்டம் 1897, பதிவு செய்யப்பட்ட பதவிகளுக்கான கலைச்சொற்களைப் புதுப்பிப்பதற்கான சிவில் நடைமுறைச் சட்டம் 1908, சில வழக்குகளில் நீதிமன்றங்களால் உயில்களுக்குச் சரிபார்ப்பு பெறும் தேவையை நீக்குவதற்கான இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 ஆகிய நான்கு சட்டங்களை திருத்த முயல்கிறது. இதுதவிர, வரைவுப் பிழையை சரி செய்வதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ஐ திருத்துகிறது.

2014 முதல் 1577 பழைய காலாவதியான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது திருத்தப்பட்டுள்ளன. இதில், 1562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 15 சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன’’ என குறிப்பிட்டார்.

இந்த சட்டம் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது.

காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் நோக்கி பேரணிக்கு அழைப்பு: வங்கதேச தூதருக்கு மத்திய அரசு கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in