சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
2 min read

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை நிலவுவதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவார் பகுதியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மேற்கு ஆசியாவில் நடக்கும் போரால் இந்தியாவுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் கே.சி. வேணுகோபால், ‘‘ஆட்சியாளர்கள் யதார்த்தத்தில் வாழவில்லை. அவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள். எங்கள் தொகுதிகளில் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். தேசிய தலைநகரிலும் மக்கள் துன்பப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த யதார்த்தம் அவர்களை பாதிக்கவில்லை. அவர்கள் வாழும் உலகம் வேறாக உள்ளது. பொதுமக்களுடன் அவர்கள் இல்லை. இந்த அரசின் தவறான அணுகுமுறையாலும் வெளியுறவுக் கொள்கையாலுமே பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த விஷயம் குறித்து ராகுல் காந்தியை பேசவிடாமல் செய்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறும்போது, “நாம் அமைதிக்கான ஆக்கப்பூர்வமான குரலாக ஒலிக்க வேண்டும். இந்த மோதல் நம்மை கடுமையாக பாதித்துள்ளது. இது மற்ற நாடுகளையும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் எரிசக்தி விநியோகத்தையும் எரிசக்தி பாதுகாப்பையும், வளைகுடா நாடுகளில் வாழும் 90 லட்சம் இந்தியர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பையும் பாதிக்கப் போகிறது. நமது பல சர்வதேச உறவுகள் இதனால் ஆபத்துக்குள்ளாகி உள்ளன.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அழுத்தம் கொடுப்பதே உலக நலனுக்கு உகந்தது. இதில் நாம் ஒரு முன்னணி குரலாகத் திகழ வேண்டும். புவியியல் ரீதியாக நாம் அருகில் இருப்பதால், நமக்கு இழப்பு அதிகம். இதனால் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

சிபிஐ எம்பி சந்தோஷ் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் குறிப்பாக பெரு நகரங்கள்தோறும் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. கிராமங்களில்கூட சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளது. உண்மையான குற்றவாளி யார்? எல்பிஜி விநியோகம் எவ்வித இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அவர்கள் ஏன் எங்களை குறைகூற வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய பாஜக எம்பி ஷஷாங் மணி, ‘‘இது ஒரு உலகளாவிய பிரச்சினை. நமது அரசாங்கம் அதை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. பீதியை தடுப்பதிலும், பதுக்கலைத் தடுப்பதிலும், பொதுமக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியிலும் நமது அரசாங்கத்தின் செயல் பாராட்டுக்குரியது. பல்வேறு இடங்களில் உள்ள நிலைமைகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதைத் தவிர்க்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனால், அமளி நீடித்ததை அடுத்து முதலில் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
‘‘இன்று என்ன நடக்கிறது என்று பாருங்கள்...’’ - ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in