‘ஜம்மு காஷ்மீருக்கு எதிராக பாக். பொய் பிரச்சாரம்’ - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா பதிலடி

‘ஜம்மு காஷ்மீருக்கு எதிராக பாக். பொய் பிரச்சாரம்’ - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா பதிலடி
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீருக்கு எதிராக பாகிஸ்தான் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதி அனுபமா சிங் குற்றம் சாட்டினார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 61-வது அமர்வில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation) முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு இந்திய பிரதிநிதி அனுபமா சிங் பதிலடி கொடுத்தார்.

அவர் தனது உரையில், ‘‘ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பொய் பிரச்சாரங்களை பரப்பி வருகிறது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை, அதன் உறுப்பு நாடு ஒன்று தனக்கான எதிரொலி அறையாக பயன்படுத்துகிறது.

பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். பாகிஸ்தானின் தொடர் பொய் பிரச்சாரத்தில் இப்போது பொறாமையின் துர்நாற்றம் வீசுகிறது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு ஒருங்கிணைந்த பகுதி. அது எப்போதும் அப்படியே இருக்கும். இந்திய சுதந்திரச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி 1947-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இது முற்றிலும் சட்டப்பூர்வமானது; திரும்பப் பெற முடியாதது.

இந்த பகுதியில் நிலுவையில் இருக்கும் ஒரே பிரச்சினை, இந்திய பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதுதான். தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. அது போலியானது என்று பாகிஸ்தான் நினைக்குமானால் அந்த நாடு ஒரு மாயத்தோற்றத்தில் இருப்பதாகவே அர்த்தம்.

ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட் என்பது சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் கோரியுள்ள சமீபத்திய நிதியைவிட இரண்டு மடங்கு அதிகம். ஜம்மு காஷ்மீர் மேம்பாடு அடைந்து வருவதை இது காட்டுகிறது.

சிவில் அரசாங்கங்கள் அரிதாகவே தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் ஒரு நாடு, ஜனநாயகம் குறித்து சொற்பொழிவு நடத்துவது கேலிக்கூத்து.

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள், அங்கு வாழும் மக்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறை சித்தாந்தத்தை நிராகரித்தை நிராகரித்ததையே காட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேறி வருகிறது.

பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை இல்லாத சூழலை உருவாக்கவே, அரசு ஆதரவு பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் முயல்கிறது. இதை மறைப்பதற்குப் பதிலாக, உள்நாட்டில் ஆழமாக வேரூன்றி வரும் நெருக்கடிகளை சரி செய்வதில் பாகிஸ்தான் கவனம் செலுத்தினால் நல்லது’’ என தெரிவித்தார்.

‘ஜம்மு காஷ்மீருக்கு எதிராக பாக். பொய் பிரச்சாரம்’ - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா பதிலடி
“மோடி ஜி, இது இந்தியா... வட கொரியா அல்ல!” - இளைஞர் காங். நிர்வாகிகள் கைதுக்கு ராகுல் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in