

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டால், உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை கடந்தாண்டு மேற்கொண்டது. பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. அவற்றை இந்திய வான் பாதுகாப்புக் கருவிகள் நடுவானில் அழித்தன. இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து அந்நாட்டு விமானப் படை தளங்கள் மீது மிகப் பெரியளவில் தாக்குதல் நடத்தியதால், பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு முன் வந்தது. இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த 88 மணி நேர போர் கடந்தாண்டு மே மாதம் 10-ம் தேதி முடிவுக்கு வந்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ‘சேனா சம்வாத்’ என்ற நிகழ்ச்சி டெல்லியில் உள்ள மானக் ஷா மையத்தில் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவம் மீண்டும் ஏற்பட்டால், இந்திய ராணுவத்தின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஜெனரல் உபேந்திர திவிவேதி கூறும்போது, ‘‘இந்த கேள்விக்கு நான் ஏற்கெனவே பதில் அளித்ததை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால், உலக வரைபடத்திலோ அல்லது வரலாற்றிலோ பாகிஸ்தான் இடம் பெற வேண்டுமா.... இல்லையா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.