

புதுடெல்லி: துரந்தர் படத்தின் 80 சதவீத வருவாயை பாகிஸ்தானின் லியாரி பகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய உளவாளி பாகிஸ்தானில் நடத்தும் உளவு வேலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தி திரைப்படம் துரந்தர். இந்தப் படம் புனைக்கதை என்றாலும், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தல், நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குல் சம்பவங்களை இணைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகனாக ரன்வீர் சிங் உளவாளி வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் மாதவன் இந்திய உளவுத்துறை இயக்குனராக நடித்துள்ளார்.
இந்திய உளவாளி பாகிஸ்தான் நாட்டின் கராச்சி அருகேயுள்ள லியாரி பகுதியில் இந்தியாவுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் கும்பலுக்குள் ஊடுருவி உளவு நடவடிக்கையை மேற்கொள்கிறார். இந்த படம் 2 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்று உலகளவில் ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது.
லியாரி பகுதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ரூ.1,000 கோடி வருவாயை ஈட்டியுள்ளதால், இதில் 80% வருவாயை லியாரி பகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது.
லியாரி பகுதி மக்கள் அளித்துள்ள பேட்டியில், "லியாரி பகுதியை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் லியாரி பகுதி மக்கள் பயனடைய வேண்டும். இப்பகுதியில் உள்ள மோசமான சாலைகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்த, துரந்தர் படத்தில் வருவாயில் 70 முதல் 80 % நிதியை வழங்க வேண்டும்" என கூறியுள்ளனர்.
ஆனால் பாகிஸ்தானின் லியாரி பகுதி மக்களின் கோரிக்கை குறித்து துரந்தர் படத்தின் இயக்குநர் ஆதித்யா தர் மற்றும் தயாரிப்பாளர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.