உ.பி.யில் 2027 தேர்தலில் ஒவைசி கட்சி 200 தொகுதிகளில் போட்டி: பாஜகவும் வாக்குகளை இழக்கும் அபாயம்
புதுடெல்லி: வரும் 2027ம் ஆண்டு உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் ஒவைசி கட்சி 200 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, சமாஜ்வாதி, காங்கிரஸுடன் ஆளும் பாஜகவும் வாக்குகளை இழக்கும் அபாயம் உள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தேசியத் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசியின் செயல்பாடுகள், உ.பி. அரசியல் கட்சிகளிடையே பதற்றத்தை தூண்டியுள்ளது. இவர் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டாலும் அவற்றில் சிறுபான்மையினர் வாக்குகளை பறித்து விடும் அபாயம் அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய கவலையில் இருப்பதாக தெரிகிறது.
முஸ்லிம் வாக்குகளின் பிளவால் ஏற்கெனவே பலவீனமான தனது சிறுபான்மையினர் ஆதரவு தளத்தை இது மேலும் குறைக்கக்கூடும் என காங்கிரஸ் அஞ்சுகிறது. 2022 சட்டப்பேரவை தேர்தலில் கூட, காங்கிரஸ் கட்சி முஸ்லிம் வாக்குகளில் குறிப்பிடத்தக்க பங்கைப் பெறவில்லை. எனவே உ.பி.யில் ஏஐஎம்ஐஎம் போட்டியால், காங்கிரஸுக்கான வாக்குகள் மேலும் குறையும் வாய்ப்புகள் உள்ளன.
முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் நிலைமை சற்று வித்தியாசமாக உள்ளது. 2022 தேர்தலில் சுமார் 79 முதல் 83% முஸ்லிம் வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி வாய்ப்பளித்த 4 முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். உ.பி.யில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தாலும் தங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் வலுவானக் கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகளை ஓரளவு பாதுகாக்கலாம் என சமாஜ்வாதி நம்புகிறது.
இது குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “உ.பி.க்கு ஒவைசி வந்தால், அவர் சைக்கிளில் வருவார்” என் கிண்டலாகக் கூறியுள்ளார். சிறுபான்மையினர் வாக்குகள் இழப்பு, முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியையும் விட்டு வைக்காது எனக் கருதப்படுகிறது. இதனால், ஒவைசியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மாநில ஏஐஎம்ஐஎம் தலைவர் சவுகத் அலி, "பகுஜன் சமாஜுடன் கூட்டணிக்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
இவர் கூறுவது போல் கூட்டணி அமைந்தால், அது சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் முஸ்லிம் வாக்குகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏஐஎம்ஐஎம் கட்சியால், ஆளும் கட்சியான பாஜகவும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது. உ.பி.யில் 30 முதல் 40% இந்து வாக்குகள் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளில் ஒவைசி கட்சி இந்து வேட்பாளர்களை நிறுத்தினால் அது, பாஜகவுக்கு இழப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
