“அரசியல் கருவியாக மாணவர்கள்...” - எதிர்க்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம்

அமைச்சர் ராஜ்நாத் சிங்
அமைச்சர் ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

புதுடெல்லி: “எதிர்க்கட்சிகள் தங்களது ஆதாயத்துக்காக இளைஞர்களை அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன. இளைஞர்கள் மத்தியில் செயற்கையாக கொந்தளிப்பு உருவாக்கப்படுகிறது” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் தீவிரமடைவது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "சிலர் தங்கள் அரசியல் நலன்களுக்காக நாட்டின் மாணவர்களையும் இளைஞர்களையும் அரசியல் கருவியாகப் பயன்படுத்த முயல்வது மிகவும் துரதிருஷ்டவசமானது.

பிரதமர் மோடியின் தலைமையில், எங்கள் அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும், அவர்களின் நலனிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

மாணவர்களின் ஒவ்வொரு கவலையையும் கேட்டுத் தீர்ப்பது எங்கள் பொறுப்பு. விழிப்புணர்வுள்ள, முதிர்ச்சியான, பகுத்தறிவுள்ள இந்திய இளைஞர்கள் இத்தகைய தவறான வழிநடத்தும் முயற்சிகளைப் புரிந்துகொள்வார்கள் என்றும், அவர்கள் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன்.

இந்த அமைதியற்ற செயல் இண்டியா கூட்டணியால் திட்டமிடப்பட்ட ஓர் அரசியல் நடவடிக்கை. எந்தவொரு நபருக்கும், குறிப்பாக நம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

சில எதிர்க்கட்சித் தலைவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான கொந்தளிப்பு உணர்வு மற்றும் அதிருப்தி ஆகியவை பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது என்று நான் நம்புகிறேன்.

தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எந்தவொரு பிரச்சினை குறித்தும் அர்த்தமுள்ள விவாதத்தை நடத்த அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றத்துக்கு பதிலாக வீதிகளில் பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொள்கின்றன.

ஜனநாயகத்தின் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கான இடம் நாடாளுமன்றம்தான். அங்கு எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முழு சுதந்திரம் உள்ளது.

எதிர்க்கட்சிகள் உண்மையாகவே அக்கறை கொண்டிருந்தால், நடைபெற்று வரும் மழைக்காலக் கூட்டத்தொடரின் சுமுகமான செயல்பாட்டில் தடைகளை உருவாக்கக் கூடாது. மாறாக, நாடாளுமன்றத்தில் தாங்கள் விவாதிக்க விரும்பும் எந்தவொரு பிரச்சினையையும் விவாதித்து அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்” என்றார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்
டெல்லியில் திரளும் ஜென்ஸீ இளைஞர்களும், சிஜேபி போராட்ட தாக்கமும் - ஓர் அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in