பெண்கள் விரோத மனப்பான்மை கொண்ட எதிர்க்கட்சிகள்: என்டிஏ சாடல்

பெண்கள் விரோத மனப்பான்மை கொண்ட எதிர்க்கட்சிகள்: என்டிஏ சாடல்
Updated on
1 min read

புது டெல்லி: அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்த முயற்சியை எதிர்க்கட்சிகள் சீர்குலைத்துவிட்டதாக தேசிய ஜனநாயக கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்த நிலையில், ஆளும் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. நேற்று மகளிர் மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவான நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையான 352 வாக்குகளைப் பெறத் தவறியதால் இம்மசோதா தோல்வியடைந்தது.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் முயற்சியை எதிர்க்கட்சிகள் சீர்குலைத்துவிட்டதாக என்டிஏ குற்றம் சாட்டிய நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, அரசின் ஒரு முக்கிய மசோதாவை தடுத்து நிறுத்திய அரிதான நிகழ்வாக இந்தத் தோல்வி அமைந்துள்ளது.

மசோதாவைத் தோல்வியடையச் செய்ததற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர், "காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதைச் செய்வது முதல் முறையல்ல. மாறாக, அவர்கள் இதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்களின் மனநிலை பெண்களின் நலனுக்கோ அல்லது நாட்டின் நலனுக்கோ உகந்ததாக இல்லை. எதிர்க்கட்சிகளின் இந்தக் கொண்டாட்டம், பல தசாப்தங்களாகத் தங்கள் உரிமைகளுக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பாகும்" என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும், நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் பாஜக தலைவர் நிதின் நபின் விமர்சித்தார். பாஜகவின் முன்னாள் தலைவர் ஜே.பி.நட்டா, "இது வெறும் ஒரு மசோதாவின் தோல்வி மட்டுமல்ல; சிறந்த எதிர்காலத்திற்காக லட்சக்கணக்கான பெண்கள் வளர்த்தெடுத்த நம்பிக்கையின் சிதைவு. எதிர்க்கட்சிகளின் குறுகிய மனப்பான்மையே நாட்டின் முன்னேற்றத்தைத் தடுத்ததற்குக் காரணம்” என்று அவர் குற்றம் சாட்டினார்.

இப்பிரச்சினையைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, எதிர்க்கட்சிகளை கண்டித்து சனிக்கிழமை முதல் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப்போவதாக என்டிஏ அறிவித்துள்ளது.

பெண்கள் விரோத மனப்பான்மை கொண்ட எதிர்க்கட்சிகள்: என்டிஏ சாடல்
“தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக” - மு.க. ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in