

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருந்த போதிலும், தேர்தல் களத்தில் 42 பெண்கள் மட்டுமே உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கேரளாவில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை (1,39,21,868) ஆண்களை விட (1,32,20,811) அதிகம். ஆனால் இந்த முறை 42 பெண்கள் மட்டுமே முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பாஜக சார்பில் 14, சிபிஐ(எம்) சார்பில் 12, காங்கிரஸ் சார்பில் 9, சிபிஐ சார்பில் 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் (முதல் முறையாக) 2 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி.விஷ்ணுநாத் கூறும்போது, ‘‘பெண்களுக்கு அதிக இடம் கொடுக்கத் தலைமை முயற்சி செய்தாலும், வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் கட்டமைப்பு ரீதியான தடைகள் உள்ளன’’ என்றார். சிபிஐ (எம்) மூத்த தலைவரும் அனைத்து இந்திய மாதர் சங்க நிர்வாகியுமான பி.கே. ஸ்ரீமதி கூறும்போது, ‘‘இடதுசாரி முன்னணி பெண்களுக்கு மொத்தம் 18 இடங்களை வழங்கியுள்ளது. இது எவ்வகையிலும் போதுமானது அல்ல. தேர்தலில் பெண்களுக்குக் குறைவான இடங்களே ஒதுக்கப்படுவது வருத்தமளிக்கிறது’’ என்றார்.
கேரளாவில் 1957-ல் சட்டப்பேரவை உருவானது முதல் இன்று வரை, பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தைத் தாண்டவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த ‘நாரி சக்தி வந்தன் அதினியம்' (பெண்கள் இடஒதுக்கீடு சட்டம்) கடந்த செப்டம்பர் மாதம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இது பெண் தலைவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனினும், தொகுதி மறுவரையறை பணிகள் முடிவடையாததால் இந்தச் சட்டம் இத்தேர்தலில் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.