

புதுடெல்லி: உத்தர பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை வரும் டிசம்பர் 4ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிச்சுமை காரணமாக எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறுகிறது. இந்நிலையில், எஸ்ஐஆர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த அதிகாரி சுதிர் குமார் (25) நேற்று முன்தினம் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சுதிர் குமாரின் சகோதரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “எனது சகோதரருக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எஸ்ஐஆர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதனிடையே, மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அதிகாரியாக (பிஎல்ஓ) பணியாற்றிய பெண், பணிச்சுமை காரணமாக கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.