

புவனேஸ்வர்: ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் ரூ.1.10 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட் முக்கிய தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒடிசாவின் கந்தமால், கஞ்சம் மாவட்டங்களை ஒட்டிய ராம்பா வனப்பகுதியில் நக்சலைட்களை தேடும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு படையினர் - நக்சலைட்கள் இடையே நேற்று காலையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்குப் பிறகு அங்கிருந்து 2 பெண்கள் உட்பட 6 நக்சலைட்களின் உடல்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
மேலும் பல்வேறு வகை ஆயுதங்களை கைப்பற்றினர். இந்நிலையில் என்கவுன்ட்டரில் இறந்தவர்களில் நக்சலைட் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கணேஷ் உய்கே (69) என அடையாளம் காணப்பட்டார். சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் உயர்நிலை மத்தியக் குழு உறுப்பினரும், அதன் ஒடிசா செயல்பாடுகளுக்கான தலைவருமாக உய்கே இருந்தார்.
பக்கா ஹனுமந்து, ராஜேஷ் திவாரி, ரூபா போன்ற பல்வேறு புனைப்பெயர்களால் அறியப்பட்ட உய்கே, தெலங்கானாவின் நல்கொண்டாவை சேர்ந்தவர். மாவோயிஸ்ட் அமைப்பில் இறுதி முடிவு எடுக்கும் மத்தியக் குழுவில் எஞ்சியிருந்த சில உறுப்பினர்களில் ஒருவராக அவர் இருந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டகாரண்ய சிறப்பு மண்டலக் குழுவில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.
மேலும், ‘சிவப்பு வழித்தடம்’ என்று அழைக்கப்படும் பகுதி முழுவதிலும் உள்ளூர் பிரிவுகளுக்கும் மத்திய தலைமைக்கும் இடையிலான பாலமாக அவர் திகழ்ந்தார். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அந்த இயக்கத்தின் விரிவாக்கத்துக்கு இவரே மூளையாக கருதப்படுகிறார். இவரைப் பற்றிய தகவலுக்கு போலீஸார் ரூ.1.10 கோடி சன்மானம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இவரது மரணம் நக்சலைட் அமைப்பினருக்கு சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட முக்கிய பின்னடைவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்தியாவை 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சலைட் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கிய மத்திய அரசின் பயணத்துக்கு வலு சேர்த்துள்ளது. இது பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக கருதப்படுகிறது.