

புதுடெல்லி: வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 46 சதவீதம் அதிகரிக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டன. இதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் 10.52 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 15.38 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
இதன்படி கடந்த தேர்தலைவிட 2029-ம் ஆண்டு தேர்தலில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 46 சதவீதம் அதிகரிக்கும். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் 14.88 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 11.30 லட்சம் கட்டுப்பாட்டு பிரிவு சாதனங்களும் இருந்தன. தற்போது 30.48 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 21.92 லட்சம் கட்டுப்பாட்டு பிரிவு சாதனங்களும் உள்ளன.
ஒவ்வொரு தேர்தலின்போதும் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நீக்கப்பட்டு புதிய இயந்திரங்கள் வாங்கப்படுவது வழக்கம். இதன்படி 3.57 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 1.25 லட்சம் கட்டுப்பாட்டு பிரிவு சாதனங்களும் நீக்கப்பட உள்ளன. இதற்குப் பதிலாக, வரும் 2029-ம் ஆண்டு தேர்தல் பணிக்காக ரூ.486 கோடியில் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் சாதனங்கள் வாங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.