“இதைவிட அவமானகரமான செயல் வேறில்லை” - தேர்தல் ஆணைய விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி சாடல்

“இதைவிட அவமானகரமான செயல் வேறில்லை” - தேர்தல் ஆணைய விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி சாடல்
Updated on: 
2 min read

புதுடெல்லி: தனது தேர்தல் தோல்விகள் குறித்து சுயபரிசோதனை செய்துகொள்வதற்குப் பதிலாக அரசியலமைப்பு சார்ந்த அமைப்பான தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கட்சி கேள்விக்குள்ளாக்குவதாக ஸ்மிருதி இரானி விமர்சித்தார்.

டெல்லியில் பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் ஸ்மிருதி இரானி, “என்னை விமர்சியுங்கள்; என்னைத் தாக்குங்கள். ஆனால், இந்த தாக்குதல்கள் இந்திய அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக மாறிவிட அனுமதிக்காதீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கூறி இருக்கிறார்.

எனினும், இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பைச் சிதைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் காங்கிரஸ் தலைமை மேற்கொள்கிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம், இரட்டைப் பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) வீடு வீடாகச் சென்று சரிபார்க்கும் பணிகளை மேற்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பெயர்களோ அல்லது இறந்தவர்களின் பெயர்களோ இருந்தால் அவற்றை நீக்கக் கூடாது என்கிறதா காங்கிரஸ்? அப்படியானால், காங்கிரஸ் இவ்வாறு விரும்பக் காரணம் என்ன?

இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜக அல்லாத அரசுகள் உள்ளன. அங்கும் இதே நிலைப்பாட்டை காங்கிரஸ் கொண்டிருக்கிறதா?

பிரிட்டிஷ் காலனித்துவ நலன்களைப் பாதுகாப்பதற்காக பிரிட்டிஷ் அதிகாரியான ஏ.ஓ. ஹியூம் என்பவரால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, இன்று இந்திய தேர்தல் ஆணையத்தையே தாக்குகிறது. இதைவிட அவமானகரமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வாக்குத் திருட்டுக்கு பொறுப்பேற்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘தேர்தல் ஆணையம் தொடர்பான முடிவுகளை, மற்ற தேர்தல் ஆணையர்களுடன் முறையாக ஆலோசிக்காமல் தலைமைத் தேர்தல் ஆணையரே எடுப்பது, தேர்தலின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணியின்போது பயன்படுத்தப்படும் படிவம் 6-ல் அனுமதியற்ற மற்றும் சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறி தேர்தல் ஆணையர்கள் இருவரும் 10 மாதங்களில் 14 ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளனர். இது நிறுவன அதிகார வரம்பை மீறும் போக்கையே காட்டுகிறது.

அனைத்து தார்மிக மற்றும் நிறுவன ரீதியிலான அதிகாரத்தை இழந்துவிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 13 கோடியே 30 லட்சம் பெயர்களை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும்.

துணிச்சலான வாக்குத் திருட்டு என்பது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்காக தலைமைத் தேர்தல் ஆணையரால் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் பதவி விலகுவதைத் தவிர வேறு எதுவும் நமது ஜனநாயகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“இதைவிட அவமானகரமான செயல் வேறில்லை” - தேர்தல் ஆணைய விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி சாடல்
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அக்.4-ல் மும்பையில் பேரணி: தாக்கரே சகோதரர்கள் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in