

புதுடெல்லி: அயோத்தியின் 15 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் மது உள்ளிட்டவை வழங்கும் புகாரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் புதிதாகக் கட்டப்பட்டது. இக்கோயிலை சுற்றியுள்ள சுமார் 15 கி.மீ. பகுதி ‘பஞ்ச்கோசி பரிக்ரமா’ என அழைக்கப்படுகிறது. அயோத்தி மற்றும் ஃபைசாபாத்தை இணைக்கும் 14 கிலோ மீட்டர் நீளத்தில் ராமர் புனிதப் பாதை அமைந்துள்ளது. இப்பகுதியில் மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதித்து அயோத்தி மாநகராட்சி மே 2025-ல் அறிவித்திருந்தது.
எனினும், அங்குள்ளவர்கள் ஆன்லைன் உணவு விநியோகத் தளங்களில் அசைவப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதன் மீது அயோத்தி மாவட்ட நிர்வாகத்துக்கு மீண்டும் மீண்டும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
புனித நகரமான அயோத்தியின் சில ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் விருந்தினர்களுக்கு அசைவ உணவு மற்றும் மதுபானங்களை வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநகராட்சி அறிவிப்பிற்கு பின்பும், கடந்த ஒன்பது மாதங்களாக மதுபான விற்பனைக்கான தடை பெரிய அளவில் அமல்படுத்தப்படவில்லை எனப் புகார்கள் உள்ளன. ராமர் புனிதப் பாதையில் இருபதுக்கும் மேற்பட்ட கடைகளில் மதுபானம் விற்கப்படுவதாகவும் உள்ளூர்வாசிகள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து அயோத்தி மாநகராட்சியின் உதவி உணவு ஆணையர் மாணிக் சந்திர சிங் கூறுகையில், “தடை இருந்தபோதிலும், ஆன்லைன் தளங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு அசைவ உணவுப் பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன.
புகார்களைத் தொடர்ந்து, ஆன்லைன் அசைவ உணவு விநியோகத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஹோட்டல்கள், கடைக்காரர்கள் மற்றும் விநியோக நிறுவனங்களுக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யத் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.