

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர், காங்கிரஸ் மேலிடம் வழங்கிய ராஜ்யசபா வாய்ப்பை நிராகரித்த சித்தராமையா, மாநில அரசியலிலேயே தீவிரமாக ஈடுபடப் போவதாக அறிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். மக்கள் மாளிகைக்குச் சென்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, “ராஜ்யசபாவுக்குச் செல்லும் வாய்ப்பை நான் நிராகரித்துவிட்டேன். எனது அரசியல் பயணம் இன்னும் முடிந்துவிடவில்லை. நான் தொடர்ந்து மாநில அரசியலிலேயே தீவிரமாகச் செயல்படப்போகிறேன். தேசிய அரசியலுக்கு செல்வதில் எனக்கு எவ்வித ஆர்வமும் இல்லை.
நான் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன். ராஜ்யசபா வாய்ப்பு குறித்தும் என்னிடம் கேட்கப்பட்டது. ஆனால், நான் அதை நிராகரித்துவிட்டேன். நான் கர்நாடக அரசியலிலேயே தொடர்ந்து இருக்க விரும்புகிறேன்.
காங்கிரஸ் மேலிடம் என்னை ராஜினாமா செய்யச் சொல்லும்போது, நிச்சயம் ராஜினாமா செய்வேன் என்று நான் உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன் அல்லவா? இரண்டு நாட்களுக்கு முன்பு, மேலிடம் என்னைப் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டது. அதன்படியே, இப்போது நான் ராஜினாமா செய்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “ஏழு கோடி மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டு முறை முதல்வராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் நான் பணியாற்றினேன்.
2006-ஆம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்ததிலிருந்து, கட்சித் தொண்டர்கள், தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு ஆதரவு அளித்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் ஒரு தற்செயல் அரசியல்வாதி. எனது குடும்பத்தில் யாருக்கும் அரசியல் பின்னணி இருந்ததில்லை” என்று குறிப்பிட்டார்.