

புதுடெல்லி: நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சிஆர்பிஎப், கடந்த 12 மாதங்களாக பணியின்போது எவ்வித உயிரிழப்பும் இன்றி செயல்பட்டு சாதனை படைத்துள்ளது. இதற்காக சிஆர்பிஎப் படை வீரர்களுக்கு எனது பாராட்டுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நேற்று, “தொடர்ச்சியாக 12 மாதங்களாக சிஆர்பிஎப் படையில், பணியின்போது எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. கடந்த 47 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இந்த ‘பூஜ்யம்’ பல விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில், ‘பூஜ்யம்’ என்ற எண்ணுடன், சிஆர்பிஎப் வீரர்கள் மூவர் வெவ்வேறு திசைகளை நோக்கி துப்பாக்கிகளை ஏந்தியிருக்கும் ஒரு புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
சிஆர்பிஎப் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிஆர்பிஎப் வீரர்கள் தாங்கள் பணியமர்த்தப்பட்டுள்ள பல்வேறு மோதல்களங்களில், தொடர்ந்து தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த சாதனையை எட்டியுள்ளோம். நாட்டின் வன்முறை அதிகம் நிறைந்த பல பகுதிகளில் சிஆர்பிஎப் வீரர்கள் உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, கடந்த பல ஆண்டுகளாக இதில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.
தற்போது, கடந்த 12 மாதங்களாக ஒரு வீரர் அல்லது அதிகாரி கூட உயிரிழக்கவில்லை என்பது, பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளதையும், இந்தப் படை தனது கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறியுள்ளதையும் காட்டுகிறது” என்றார்.
சுமார் 3.25 லட்சம் வீரர்களைக் கொண்ட சிஆர்பிஎப், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்புப் பணிகள் ஆகியவற்றில் இந்தப் படை ஈடுபட்டு வருகிறது.