“தேசிய அரசியலுக்கு திரும்புகிறார் நிதிஷ் குமார்!” - அமித் ஷா

மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு நிதிஷ் வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவை எம்.பி பதவிக்கு நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல். உடன் அமித் ஷா.

மாநிலங்களவை எம்.பி பதவிக்கு நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல். உடன் அமித் ஷா.

Updated on
2 min read

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தேசிய அரசியலுக்கு திரும்புகிறார் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலத்தின் முதல்வராக அவர் பதவி வகித்த காலம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பிஹார் அரசியலின் முக்கிய திருப்பமாக அம்மாநிலத்தின் முதல்வராக கடந்த 2005 முதல் தொடர்ந்து இருந்து வந்த நிதிஷ் குமார், முதல்வர் பதவியில் இருந்து விலக இருக்கிறார். இன்று அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாட்னாவில் இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவரோடு, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹா, பாஜகவின் ஷிவேஷ் குமார், ஜேடியுவின் ராம் நாத் தாக்கூர் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமித் ஷா, ‘‘பிஹார் முதல்வர், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேசிய அரசியலுக்குள் நுழைகிறார்.

நிதிஷ் குமார் 2005 முதல் தற்போது வரை பிஹார் முதல்வராக பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலம் உண்மையிலேயே புகழ்பெற்றது. இந்த பதவிக்காலம் பிஹார் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

பிஹாரின் முழுமையான வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியவர் நிதிஷ் குமார். சட்டப்பேரவை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, முதல்வராக, மத்திய அமைச்சராக என பல பதவிகளை அவர் வகித்துள்ளார். ஆனால், அவர் கரைபடாத கரத்துக்குச் சொந்தக்காரர். அவரது முழு வாழ்க்கையுமே ஊழலுக்கு எதிராக இருந்து வந்துள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையிலான கடந்த 11 ஆண்டு கால மத்திய ஆட்சியில், பிஹாரின் முன்னேற்றத்துக்கு நிதிஷ் குமார் அனைத்து வகையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். பிரதமர் மோடியின் அனைத்து முயற்சிகளும் பிஹார் மக்களைச் சென்றடைந்தது அவரது தலைமையின் கீழ்தான்.

அவர் மாநிலங்களவை எம்.பி.யாக டெல்லிக்கு திரும்புகிறார். நானும் எங்கள் என்டிஏ சகாக்கள் அனைவரும் அவரை மனதார வரவேற்கிறோம். முதல்வராக அவரது பதவிக்காலம் பிஹார் மக்களால் எப்போதும் நினைவுகூரப்பட்டு மதிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நிதிஷ் குமார் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘‘இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து உங்கள் ஆதரவை அளித்து வருகிறீர்கள். இந்த வலிமை மூலம்தான் நாங்கள் பிஹாருக்கும் உங்கள் அனைவருக்கும் முழுமையான விசுவாசத்துடன் சேவை செய்து வருகிறோம்.

உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவின் காரணமாகவே பிஹார் இன்று வளர்ச்சியுடன் கூடிய மரியாதையின் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது. இதற்காக நான் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பொது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து பிஹார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே, இந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.

பிஹார் மக்களுடனான எனது இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்றும், வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்கும் என்றும் நான் மனமார உறுதியளிக்கிறேன். பிஹாரில் அமைய உள்ள புதிய அரசாங்கத்துக்கு எனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.

<div class="paragraphs"><p>மாநிலங்களவை எம்.பி பதவிக்கு நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல். உடன் அமித் ஷா.</p></div>
பிஹாரில் அதிகார மாற்றம்: நிதிஷ் குமாரை பாஜக கடத்திச் சென்றுவிட்டதாக தேஜஸ்வி விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in