

புதுடெல்லி: வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் நாட்டின் ஜனநாயகத்துக்கு ராகுல் காந்தி சவால் விடுப்பதாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் குற்றம் சாட்டியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று இண்டியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹரியானாவின் ரோத்தக் நகரில் பாஜகவின் சார்பில் ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம் என்கிற பெயரில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: ‘ஜனநாயகத்தைக் காப்போம்' பேரணியில் நாம் பங்கேற்கும்போது, நாடு முழுவதும் வேண்டுமென்றே பரப்பப்படும் குழப்பம் மற்றும் ஸ்திரமின்மை சூழலை நாம் கவனிக்க வேண்டும். ராகுல் காந்தி வெளிநாட்டு சக்திகளின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்கிறார்.
அவர்களின் தூண்டுதலின் பேரில் இந்தியாவின் ஜனநாயக அமைப்புக்கு சவால் விட முயற்சிக்கிறார். சமீப காலமாக பிறநாடு களில் பிளவுகளை விதைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் அதே வெளிநாட்டு சக்திகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சில காங்கிரஸ் தலைவர்களும் ‘ஆட்சியை மாற்றுவது' பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இது மக்களின் ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட அரசு. இதன் மீது யாராலும் கை வைக்க முடியாது.
நாட்டின் 140 கோடி மக்கள் மீது உங்களுக்கு (காங்கிரஸுக்கு) நம்பிக்கை இல்லை. அப்படியென்றால், யார் மீது உங்கள் நம்பிக்கையை வைக்கிறீர்கள்? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.