‘இ20 பெட்ரோல் விவகாரத்தில் என் குடும்பத்தினர் மீது அவதூறு’ - நீதிமன்றத்தை நாடிய நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Updated on
1 min read

மும்பை: இ20 எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரம் தொடர்பாக, தன்னையும் தன் குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சமூக ஊடகங்களில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகள், டீப் ஃபேக் படங்கள் மற்றும் காணொலிகளில் இ20 எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபத்துடன் என்னையும் எனது குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகிறது. எத்தனால் கலப்புக் கொள்கையானது பெட்ரோலிய அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. எனவே, இதன்மூலம் எனது குடும்பம் ஆதாயம் அடைவதாக சொல்வது ஆதாரமற்ற பொய்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவிலான எத்தனால் கலப்பு சில வாகனங்களின் செயல்திறனில் சிக்கல்களையும், சேதத்தையும் ஏற்படுத்தியதாகச் சமூக ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தன் மீதான அவதூறு பதிவுகளை பரப்ப உதவிய குற்றச்சாட்டில் மெட்டா, கூகுள் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர நிதின் கட்கரிக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

முன்னதாக, அரசாங்கத்தின் இ20 எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதாக நான்கு சமூக ஊடகப் பிரபலங்களுக்கு எதிராக நாக்பூரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
“பிஹாரில் மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிகள் பயன்படுத்தியது ஏன்?” - பிரதமருக்கு ராகுல் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in