

சுரேந்தர் கோலி
புதுடெல்லி: நொய்டாவின் நிதாரி தொடர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருந்த சுரேந்தர் கோலி தற்கொலை செய்துள்ளார். ஹரித்துவாரில் தேநீர் கடை நடத்தியவர் அதனுள் தூக்கில் தொங்கினார்.
உத்தரப் பிரதேசம் நொய்டாவின் நிதாரி கிராமத்தில் கடந்த 2006-ல் வெளியான கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் சொகுசு பங்களாவில் மணீந்தர் சிங் பாந்தரின் பணியாளராக வாழ்ந்தார் சுரேந்தர் கோலி.
நிதாரியில் காணாமல் போன ஒரு இளம்பெண் வழக்கில் பாந்தர் மற்றும் கோலி மீது சந்தேகம் எழுந்திருந்தது. இதையடுத்த விசாரணையில் சொகுசு பங்களா வளாகத்தில் தோண்டி, 19 குழந்தைகள் மற்றும் ஒரு இளம் பெண்ணின் எலும்புக்கூடுகள் கிடைத்தன.
மிகவும் பரபரப்பான இந்த வழக்கில் சுரேந்தர் கோலி முக்கிய குற்றவாளியானார். சிபிஐ விசாரித்த வழக்கில் பாந்தர் விடுவிக்கப்பட்டு, அலகாபாத் உயர் நீதிமன்றம் கோலிக்கு தூக்கு தண்டனை விதித்தது.
இதன் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் முறையான சாட்சிகள் இல்லை என கோலியையும் 2025-ல் விடுவித்தது. இதனால், சுமார் 19 வருடங்கள் சிறையிலிருந்த கோலி, ஹரித்துவாரில் ஒரு தேநீர் கடை நடத்தி வந்தார்.
இன்று காலை இவர் தன் கடையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். தகவல் கிடைத்த உத்தராகண்ட் காவல் துறை உடலைக் கைப்பற்றி விசாரணை செய்கிறது.
சுரேந்திர கோலி, உத்தராகண்டின் அல்மோராவைச் சேர்ந்தவர். தனது விடுதலைக்கு பின் சில மாதங்கள் டெல்லியில் வாழ்ந்தவர், அதன் பின்னர் டேராடூனுக்கு மாறியுள்ளார்.
அங்கு ஒரு சிறிய சிற்றுண்டி கடை நடத்தியவருக்கு வியாபாரம் சரியாக இல்லை. இதனால், ஹரித்துவாரில் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி உள்ளார்.
தனது இந்த 3 மாதப் பணியில் தான் கோலி என்பதை மறைத்து சதாராம் என்ற பெயரில் வாழ்ந்துள்ளார். பிறகு 3 தினங்களுக்கு முன் ஹரித்துவாரின் பூபத்வாலா பகுதியில் லால் மாதா கோயிலுக்கு எதிரில் ஒரு தேநீர் கடை திறந்துள்ளார்.
கடையில் அவரது உடமைகளை சோதனையிட்ட போது ஆதார் அட்டையில் அவர் சுரேந்தர் கோலி என்பது தெரிந்தது. இவர் உத்தராகண்டின் அல்மோரா மாவட்டம், பிகியாசென் பகுதியின் மங்க்ருக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.
போலீஸார் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கடையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை.
குடும்பப் பிரச்சினையே தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இறப்புக்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.