

மகாராஷ்டிரப் பள்ளியொன்றில் நடன ஒத்திகை மேற்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த 13 வயது சிறுமி, பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் வரோரா பகுதி உள்ளது. அங்குள்ள செயிண்ட் ஆன்ஸ் பப்ளிக் பள்ளியில் நடனப் பயிற்சிகள் நடைபெற்று வந்தன. நவம்பர் மாதக் கடைசியில் பள்ளி சார்பாக நடைபெறும் விழாவில் ஆட, ஒத்திகை நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து வரோரா காவல்நிலைய வட்டாரங்கள் கூறும்போது, இந்த நடன ஒத்திகையில் ருச்சா திலிப் தத்தார்கர் என்னும் 13 வயது சிறுமியும் கலந்து கொண்டார். குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இருந்த போதிலும் பயிற்சிக்காக ருச்சா பள்ளிக்கு வந்தார்.
காலையில் சுமார் 10 மணிக்கு நடனமாடிக் கொண்டிருக்கும்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். சோர்வாக உணர்வதாகவும் தெரிவித்தார். உடனடியாகத் தரையில் மயங்கி விழுந்த அவரை ஆசிரியர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ருச்சா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பள்ளியின் செய்தித் தொடர்பாளர் காவல் நிலையத்தில் விவரங்களை அளித்தார். இதனை அடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
பிடிஐ