

மும்பை: கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஆக.15-ம் தேதி நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்படும் என அபிஜித் திப்கே அறிவித்துள்ளார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இன்னமும் மாணவர்கள் பள்ளிகளுக்கு நீண்டதூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. இதனால் குறிப்பாக பெண் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
நாம் புதிய நாடாளுமன்றத்தையும், புதிய பிரதமரின் இல்லத்தையும் அமைத்துள்ளோம். ஏன் நம்மால் கிராமங்களில் புதிய பள்ளிகளை உருவாக்க முடியவில்லை? கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை நமது நாட்டின் எதிர்காலமாக நாம் கருதவில்லையா? அந்தக் குழந்தைகளுக்காக நாம் என்ன செய்துள்ளோம், பெரிய நகரத்தில் ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் வசதிகளை அவர்களால் பெற முடியாத நிலையை ஏன் மாற்ற முடியவில்லை?
80-வது சுதந்திர தினமான வரும் 15-ம் தேதி, அரசு பள்ளிகளை மேம்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்படும். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள எனது கிராமமான ஹிங்கோலிக்குச் சென்று, அங்குள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துமாறு கிராமத் தலைவரிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன்.
கிராம தலைவர்களுக்கு...
இந்த காணொலியைக் காணும் அனைத்து கிராமத் தலைவர்களும், பெற்றோரும் தங்கள் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையை மேம்படுத்த உதவ வேண்டும். பள்ளிகள் மேம்படுத்தப்பட்ட பிறகு உள்ள நிலை குறித்த புகைப்படம், வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அவை சிஜேபி-யின் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.