‘ராவணன் உருவ பொம்மை எரிப்பு பொழுதுபோக்கு அல்ல’ - உஜ்ஜைனி கோயில் அர்ச்சகர் வாதம்

‘ராவணன் உருவ பொம்மை எரிப்பு பொழுதுபோக்கு அல்ல’ - உஜ்ஜைனி கோயில் அர்ச்சகர் வாதம்
Updated on: 
2 min read

புதுடெல்லி: தசரா பண்டிகையின் முக்கிய நிகழ்வான ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்வு ஒரு மத நிகழ்வு, அது பொழுதுபோக்காக சுருங்கி விடக்கூடாது எனக் கூறி, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி கோயில் அர்ச்சகர் ஒருவர், மதநூல்களின் அடிப்படையில் தன்னுடன் விவாதத்துக்கு வருமாறு நான்கு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேம் உஜ்ஜைனி மகாகாளி கோயில் அர்ச்சகர் மகேஷ் பூஜாரி. இவர்தான் ராவணன் உருவபொம்மை எரிப்பு மீது இவ்வாறு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

தசரா பண்டிகையை முன்னிட்டு, வட மாநிலங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் ராவணன் உருவ பொம்மை எரிக்கும் வழக்கம் உள்ளது. இது ராவணனுக்கு எதிராக ஸ்ரீராமர் பெற்ற வெற்றியையும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும் குறிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது.

இந்த வழக்கத்தின் மீது இந்த வருடம் புதிய விவாதம் ஒன்று எழுந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் புனித நகரமான உஜ்ஜைனி நகரின் பழம்பெரும் மகாகாளி கோயிலைச் சேர்ந்த அர்ச்சகர் மகேஷ் பூஜாரி, இந்தப் திய விவாதத்தை கிளப்பி உள்ளார்.

ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் இந்த மரபை மகேஷ் பூஜாரி, கேள்விக்கு உள்ளாக்கி இருப்பதடன், அந்த நிகழ்வை நிறுத்துவதற்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். இதற்கு அடிப்படை ஆதாரமாக அவர், வடமாநிலங்களின் புனித நூல்களான வால்மீகி ராமாயணம் மற்றும் ராமசரிதமானஸ் உள்ளிட்ட முக்கிய மத நூல்களை சுட்டிக்காட்டி உள்ளார்.

இவற்றில் ராவணனைக் கொன்றது குறித்து விவரிக்கப்பட்டு உள்ளதே தவிர,  அவரை எரிப்பது பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று மகேஷ் பூஜாரி வாதிடுகிறார். இது குறித்து அவர் உஜ்ஜைனியில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யும் நான்கு அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

<div class="paragraphs"><p>மகேஷ் பூஜாரி</p></div>

மகேஷ் பூஜாரி

அதில், மதநூல்களின் அடிப்படையில் தன்னுடன் விவாதத்துக்கு வருமாறு அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சவால் விடுத்துள்ளார். 

மேலும், தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே தனது எதிர்ப்பைக் கைவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மகேஸ் பூஜாரி கூறுகையில், “பிராமணரான ராவணன் ஓர் அறிஞர். சிறந்த முனிவர். ஸ்ரீராமர் கூட ராவணனின் அறிவை மதித்து இருக்கிறார். மதக் கதைகளுக்கும் தற்கால நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

சனாதன தர்மத்தின் கொள்கைகளும் மத நம்பிக்கைகளும் அவமதிக்கப்படும்போது, அதற்கு எதிராகக் குரல் கொடுப்பது அவசியம். ராமர் - ராவணன் யுத்தம் என்பது ஒரு மத மற்றும் ஆன்மிக நிகழ்வு. அதை வெறும் பொழுதுபோக்காகவோ அல்லது பொது நிகழ்வாகவோ மட்டும் சுருக்கிவிடக் கூடாது. நான் அனுப்பிய சட்டப்பூர்வ நோட்டீஸுகளுக்கு பதில் கிடைக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட அமைப்புகளை விவாதத்துக்கு அழைப்பேன்.

இதன்மூலம், சர்ச்சையை உருவாக்குவது என் நோக்கமில்லை. மாறாக, புனித நூல்களின் அடிப்படையில் இந்த விஷயத்தில் தெளிவு பெறுவதே அவசியம்.

மத நூல்களில் ராவணன் தகனம் குறித்த ஆதாரங்களை ஏற்பாட்டாளர்கள் சமர்ப்பித்தால் நான் என் போராட்டத்தை முடித்துக்கொள்கிறேன். அத்தகைய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், ராவணன் தகனம் என்ற இந்த மரபு முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

தனது இந்தப் பிரச்சாரத்தை நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி, அதன்மூலம் தனது கருத்துகளைப் பரப்ப முயற்சித்துள்ளார் மகேஷ் பூஜாரி. இவற்றில், ராவண தகனத்தின் மத ரீதியான செல்லுபடியாகும் தன்மையைப் பற்றிச் சிந்திக்க பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சாரம் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது அமைப்பிற்கோ எதிரானது இல்லை. மாறாக, மதரீதியான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுவருகிறார்.

தனது பிரச்சாரத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு கிடைப்பதாகவும் மகேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார். இதற்காக, 15 முதல் 20 மாநிலங்களிலிருந்து தனக்குக் கடிதங்கள் வந்துள்ளதாகவும், ராஜபுத்திரர்கள், தலித்துகள், சலவைத் தொழிலாளர் சமூகத்தினர் மற்றும் பழங்குடி சமூகத்தினர் உட்பட பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து தனக்கு ஆதரவு கடிதங்கள் வந்துள்ளதாக பூசாரி மகேஷ் கூறியுள்ளார். இவற்றில் பெருமளவாக மகாராஷ்டிராவிலுள்ள பழங்குடியின சமூகத்திடமிருந்து வந்திருப்பதாக மகேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

‘ராவணன் உருவ பொம்மை எரிப்பு பொழுதுபோக்கு அல்ல’ - உஜ்ஜைனி கோயில் அர்ச்சகர் வாதம்
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம் கோலாகலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in