

புதுடெல்லி: நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிவால் சகோதரர்களின் ஜாமீன் மனுக்களை சிறப்பு விரைவு நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கில் தினேஷ் பிவால், விகாஸ் பிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என ஜூலை 23 அன்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம், 2024-ன் கீழ் பதிவான வழக்குகளை விசாரிக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
டெல்லி உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் அருண் பரத்வாஜ் பிறப்பித்த உத்தரவின்படி, திஸ் ஹஸாரி நீதிமன்ற மத்தியஸ்த மையப் பொறுப்பு நீதிபதியாக இருந்த அனு குரோவர் பாலிகா, இந்த புதிய விரைவு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக (சிபிஐ) இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை இந்த நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.
இந்த விரைவு நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பிவால் சகோதரர்களின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன. சிறப்பு நீதிபதி அனு குரோவர் பாலிகா, ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தின் அறை எண் 408-ல் இந்த மனுக்களை விசாரிக்கஉள்ளார்.