

திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் அடுத்த மேயர் யார் என்ற போட்டியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஸ்ரீலேகாவின் பெயர் முன்னிலையில் இருக்கிறார். யார் இவர்?
கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதேபோல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் கணிசமான இடங்களைக் கைப்பற்றி உள்ளது.
குறிப்பாக, திருவனந்தபுரம் மாநகராட்சியில் 101 வார்டுகள் உள்ளன. இதில் 50 வார்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 29, காங்கிரஸ் கூட்டணிக்கு 19 வார்டுகள் கிடைத்தன. 2 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்று உள்ளனர்.
கடந்த 45 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கூட்டணியின் கோட்டையாக இருந்தது. முதல் முறையாக இந்த மாநகராட்சியை பாஜக கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது.
இதையடுத்து திருவனந்தபுரம் நகரத்தின் முதல் பெண் என்ற அந்தஸ்துக்குரிய புதிய மேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஸ்ரீலேகா நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாஸ்தாமங்கலம் வார்டில் போட்டியிட்ட ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை விட 700 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்ரீலேகா வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1987-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த ஸ்ரீலேகா, கடந்த 2020-ல் ஓய்வு பெற்றார்.
கடந்த 1960-ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பேராசிரியர் என்.வேலாயுதன் நாயர் - பி.ராதாம்மா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ரீலேகா. காட்டன் ஹில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். பின்னர் பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். பேராசிரியராக பணியாற்றி வந்தவர், ரிசர்வ் வங்கி வேலையில் சேர்ந்தார்.
அதிக சம்பளம், சலுகைகள் கிடைத்தாலும், 1987-ம் ஆண்டு போலீஸ் துறையில் சேர்ந்தார். கேரள மாநிலத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
சில ஆண்டுகளில் போலீஸ் துறையில் ‘முன்மாதிரி’ அதிகாரியானார். சிபிஐ-யில் சில காலம் பணியாற்றி போது, உடனுக்குடன் அவர் எடுக்கும் முடிவுகள், சோதனைகளால் மிகவும் பிரபலமானார். அதற்காக போலீஸ் துறையில், ‘ரெய்டு ஸ்ரீலேகா’ என்றே அழைக்கப்பட்டார். இவரது சேவையைப் பாராட்டி கேரள அரசு கடந்த 2007-ம் ஆண்டு விருதும் வழங்கி உள்ளது.
கேரளாவின் முதல் பெண் டிஜிபியானார். 33 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். ‘மரண தூதன்’ உட்பட இவர் இதுவரை 9 புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது கணவர் டாக்டர் சேதுநாத். இவர்களது மகன் கோகுல் எம்பிஏ படித்தவர்.
கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் சேர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டார். அப்போது, ‘‘பிரதமர் மோடியின் தலைமை மீது ஈர்க்கப்பட்டு, பாஜக.வில் இணைந்தேன்’’ என்று ஸ்ரீலேகா கூறினார்.
‘‘நான் பணியில் இருந்தவரை பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டேன். அந்த வகையில் ஓய்வு பெற்ற பிறகு அரசியல் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை செய்ய முடியும் என்று நம்புகிறேன்’’ என்று கம்பீரத்துடன் கூறுகிறார் ஸ்ரீலேகா.