

புதுடெல்லி: பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகளும் மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலே ஆகிய இருவரும் நேற்று சந்தித்துப் பேசினர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே விவகாரத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகளும் மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலே ஆகிய இருவரும் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினர்.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்ட மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த சூழலில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. என்சிபிக்கு (எஸ்பி) 8 எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது, நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகள் தொடர்பான ஒரு மனுவை சரத் பவார் பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்தார். முன்னதாக, தனது அலுவலகத்துக்கு வந்த சரத் பவாரை, பிரதமர் மோடி நுழைவு வாயிலில் சென்று வரவேற்றார். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் சிரித்தபடி உரையாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதி அதிகரிக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என சுப்ரியா சுலே சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சரத் பவாரின் என்சிபி கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினரை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (என்டிஏ) இணைக்க அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியானது. ஆனால், என்சிபியின் இரு பிரிவுகளும் மீண்டும் இணைய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.