பாடப்புத்தக சர்ச்சை - நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி

பாடப்புத்தக சர்ச்சை - நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி
Updated on
2 min read

புது தில்லி: 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நீதித்துறை ஊழல் குறித்த பாடம் இடம் பெற்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

பொது மன்னிப்பு கோரி என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சில் (என்சிஇஆர்​டி) சமீபத்தில் 8ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்தை வெளியிட்டது. அதில், “நமது சமூகத்தில் நீதித் துறை​யின் பங்​கு” என்ற தலைப்​பிலான பாடம் இடம்பெற்றிருந்​தது.

என்சிஇஆர்டி இயக்குநரும் உறுப்பினர்களும் அந்த பாடம் இடம் பெற்றதற்காக எவ்வித நிபந்தைனகளும் இன்றி முழுமையான மன்னிப்பை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறார்கள். அந்த புத்தகங்கள் முழுயைாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. அவை இனி கிடைக்காது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘‘சிரமத்தை ஏற்படுத்தியதற்காக உண்மையில் நாங்கள் வருந்துகிறோம். அனைத்து தொடர்புடைய தரப்பினரின் புரிதலையும் பாராட்டுகிறோம். கல்வி உள்ளடக்கத்தில் துல்லியம், உணர்திறன், பொறுப்புணர்வு ஆகியவற்றை நிலை நிறுத்துவதில் என்சிஇஆர்டி தொடர்ந்து உறுதியாக உள்ளது’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில், “நமது சமூகத்தில் நீதித் துறை​யின் பங்​கு” என்ற தலைப்​பிலான பாடம் இடம்பெற்றிருந்​தது. அதில், நீதித் துறை​யின் ஊழல் குறித்து விவரிக்​கப்​பட்டு இருந்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதிமன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்தது.

தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு கடந்த பிப். 26ம் தேதி இந்த வழக்கை விசாரித்தபோது, பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதற்கு பதில் அளித்த மத்​திய அரசின் சொலிசிட்​டர் ​ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவ​காரத்​துக்கு நிபந்தனையற்ற மன்​னிப்பு கோரு​கிறேன். புத்​தகத்​தில் குறிப்​பிட்ட அத்தி​யா​யத்தை எழு​தி​ய​வர்​கள் இனிமேல் புத்​தகக் குழு​விலோ, கல்​வித் துறை​யின் பணி​யிலோ ஈடு​படுத்​தப்பட மாட்டார்கள். சந்தைக்​குச் சென்ற 32 புத்​தகங்​களும் திரும்​பப் பெறப்​பட்​டுள்​ளன. ஒட்​டுமொத்த புத்​தக​மும் மறு ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​படும்’’ என உறுதி அளித்தார்.

இந்த வழக்கில் மூத்த வழக்​கறிஞர்​கள் அபிஷேக் மனு சிங்​வி, கபில் சிபில் ஆகியோர் ஆஜரானார்கள். அனைத்​துத் தரப்பு வாதங்​களை​யும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில், ‘‘இந்த விவகாரத்தில் மத்​திய கல்​வித் துறை செயலர், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் இயக்​குநர் தினேஷ் பிரசாத் சக்​லானி உரிய விளக்​கம் அளிக்க வேண்​டும். நீதித் துறையில் ஊழல் என்ற அத்​தி​யா​யத்​துடன் வெளி​யான 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​துக்கு தடை விதிக்கப்படுகிறது. அச்சு மற்​றும் டிஜிட்​டல் உள்​ளிட்ட அனைத்து வகை​யிலும் பாடப் புத்​தகத்தை நீக்க வேண்​டும்.

இதுதொடர்​பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்சிலும், மத்​திய அரசும் பிர​மாண பத்​திரத்தை தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த உத்​தர​வு​களைச் செயல்​படுத்தியது தொடர்​பான பிர​மாண பத்​திரங்​களை அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களின் கல்வி துறை​யின் முதன்​மைச் செயலாளர்​கள் 2 வாரங்​களுக்​குள் தாக்​கல் செய்ய வேண்​டும்.

இந்​தப் புத்​தகத்தை அச்​சிட​வோ, டிஜிட்​டல் வடி​வில் பகிரவோ தடை விதிக்​கப்​படு​கிறது. தடையை மீறு​வோர் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கப்​படும். வழக்​கின் அடுத்த கட்ட விசா​ரணை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்​கப்​படு​கிறது’’ என தெரிவித்தது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று என்சிஇஆர்டி பொது மன்னிப்பு கோரி உள்ளது.

பாடப்புத்தக சர்ச்சை - நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி
டி20 உலகக் கோப்பை பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு: பிசிசிஐ அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in