சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து நேற்று கூறியதாவது: நாங்கள் எப்போதும் பஞ்சாப் மாநில நலன் மற்றும் பஞ்சாபிகளுக்காகவே பேசுவோம். ஆனால், முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு ரூ.500 கோடி பணம் கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. ஆனால், பஞ்சாபை பொற்கால மாநிலமாக மாற்றும் வல்லமை எங்களிடம் உள்ளது.
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி, நவ்ஜோத் சிங் சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கெனவே ஐந்து தலைவர்கள் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர். அவர்கள் சித்துவை முன்னுக்கு வரவிட மாட்டார்கள்.
பாஜக அவருக்கு பதவி வழங்கினால் அக்கட்சியில் சேர்வாரா என்பது குறித்தெல்லாம் நான் கருத்து தெரிவிக்க முடியாது. இவ்வாறு கவுர் தெரிவித்தார். பஞ்சாபில் 2027-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சித்துவின் எதிர்கால அரசியல் நகர்வு பரபரப்பை கிளப்பியுள்ளது.