

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய ஏஜேஎல் நிறுவனத்தை யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இயக்குநர்களாக உள்ளனர். இதில் முறைகேடு நடந்ததாக சுப்பிரமணியசாமி கடந்த 2014-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.
எப்.ஐ.ஆர் இல்லாமல் தனிநபர் புகார் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ஏற்க முடியாது என டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூறிவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் ரூ.752 கோடி மதிப்பிலான சொத்து முடக்கப்பட்டுள்ள இந்த மோசடி வழக்கில், இழப்பை தடுக்க இந்த தடை அவசியம் எனவும், தனிநபர் புகார் என்பதால், குற்றம் புரிந்தவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்பது விரோதமான தீர்ப்பு எனவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.