

பெங்களூரு: மைசூரு தசரா விழாவின்போது முதல்வர் டி.கே.சிவகுமாருடன் பூஜைக்கு சென்ற பட்டியலின அமைச்சர்கள் 3 பேரை போலீஸ் உயரதிகாரி தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் இறுதி நாளான புதன்கிழமை கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், அரண்மனை வளாகத்தில் நந்தி கொடிக்கு மகர லக்கனத்தில் சிறப்பு பூஜை செய்தார். அங்கு முதல்வருடன் கன்னட கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி சென்றார். அவரைத் தொடர்ந்து நகர நிர்வாக துறை அமைச்சர் எச்.சி.பாலகிருஷ்ணா, விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சாமி, அறநிலையத் துறை அமைச்சர் பசவந்தப்பா ஆகியோர் சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருருந்த மைசூரு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ரிஷ்யாந்த், முதல்வர் டி.கே.சிவகுமார் பூஜை நடக்கும் இடத்துக்கு சென்றதும், அவருடன் வந்த அமைச்சர் சிவராஜ் தங்கடகி பூஜை நடக்கும் இடத்துக்கு செல்வதை தடுக்க முற்பட்டார். அதற்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை உள்ளே அனுப்பினார்.
அமைச்சர் சிவராஜ் தங்கடகியைத் தொடர்ந்து அவருக்கு பின்னால் வந்த அமைச்சர்கள் எச்.சி.பாலகிருஷ்ணா, நரேந்திர சாமி, பசவந்தப்பா ஆகிய 3 பேரையும் காவல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதனை கவனித்த முதல்வர் டி.கே.சிவகுமார் போலீஸ் அதிகாரியுடன் பேசி 3 அமைச்சர்களையும் உள்ளே அனுமதிக்குமாறு கூறினார். இதையடுத்து 3 அமைச்சர்களும் பூஜை நடக்கும் இடத்துக்கு சென்றனர்.
இதனிடையே அமைச்சர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட வீடியோ ஊடகங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக மூத்த தலைவர் சலவாதி நாராயணசாமி கூறுகையில், “அமைச்சர்கள் சிவராஜ் தங்கடகி, நரேந்திர சாமி, பசவந்தப்பா ஆகிய 3 பேரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதாலே பூஜை நடக்கும் இடத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அரசின் வழிகாட்டுதலின்படியே போலீஸ் அதிகாரி அவ்வாறு நடந்துக் கொண்டிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த அதிகாரி மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்'' என விமர்சித்தார்.
இது குறித்து முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ''அமைச்சர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது தெரிந்ததும் நானே நேரடியாக தலையிட்டு நிலைமையை சரி செய்தேன். அமைச்சர்களை தடுத்து நிறுத்தும் அளவுக்கு போலீஸ் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். இத்தகைய செயலை ஒருபோதும் ஏற்க முடியாது.
இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமை செயலர் ஷாலினி ரஜ்னேஷுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் எந்தெந்த அதிகாரிகள் அவ்வாறு செயல்பட்டனர் என கண்டறிந்து அறிக்கை அளிப்பார்'' என்றார்.