“எப்ஸ்டீன் உடனான சந்திப்புகள் தொழில்முறை சார்ந்தவை” - ராகுலுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

“எப்ஸ்டீன் உடனான சந்திப்புகள் தொழில்முறை சார்ந்தவை” - ராகுலுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் இடம் பெற்றுள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எப்ஸ்டீனுடனான தனது சந்திப்புகள் முற்றிலும் தொழில்முறை சார்ந்தவை என்றும், அவை சர்வதேச அமைதி தூதுக்குழுவின் ஒரு பகுதியாகவே நிகழ்ந்தன என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்தீப் சிங் பூரி, "நான் சர்வதேச அமைதி நிறுவனத்தில் பணியாற்றியபோது, அதன் தலைவர் டெர்ஜே ரோட்-லார்சன் மூலம் எப்ஸ்டீனை சந்தித்தேன். ஒட்டுமொத்தமாக 3 அல்லது அதிகபட்சம் 4 முறை மட்டுமே அவரைச் சந்தித்துள்ளேன்.

அதுவும் ஒரு தூதுக்குழுவின் ஒரு பகுதியாகவே அந்தச் சந்திப்புகள் நடைபெற்றன. அவரது குற்றச் செயல்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறினார். எப்ஸ்டீன் தன்னைப் பற்றி குறிப்பிட்டிருந்த ஒரு மின்னஞ்சலை சுட்டிக்காட்டிய அவர், ராகுல் காந்தி அந்த மின்னஞ்சல்களை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்களில் தனது பெயர் ஒரு சில இடங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும், அவை அனைத்தும் தான் ஐநாவுக்கான இந்தியத் தூதராக இருந்த காலத்தில் நடைபெற்ற சர்வதேச ஆலோசனைகள் தொடர்பானது என்றும் அவர் கூறினார். 2014-ம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், இந்தியாவில் இணையம் சார்ந்த பொருளாதார வாய்ப்புகள் குறித்து தான் பேசியிருந்ததை பூரி வாசித்துக் காட்டினார்.

“எப்ஸ்டீன் உடனான சந்திப்புகள் தொழில்முறை சார்ந்தவை” - ராகுலுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
"நாம் ஒரு போர் சகாப்தம் நோக்கி நகர்கிறோம்...” - மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in