

புதுடெல்லி: ராஜஸ்தானில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் முஸ்லிம்களும் போட்டியிடுகின்றனர். ஜெய்ப்பூர் மாநகராட்சி தேர்தலில் 8 முஸ்லிம்களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. ராஜஸ்தானில் 309 முனிசிபல் நகராட்சி மன்றங்களின் 10,245 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக, 41 மாவட்டங்களில் இருந்து 60,894 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் தவிர இதர மாநிலங்களைப் போல் அன்றி, பெரும்பாலான மாவட்டங்களில் முஸ்லிம்களை பாஜக வேட்பாளராக களமிறக்கி உள்ளது. ஜெய்ப்பூர் மாநகராட்சியில் மட்டும் மிக அதிக அளவாக 8 முஸ்லிம்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள வார்டுகளில் போட்டியிடுகின்றனர். இதற்கு முன்பு காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்த இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து, கடைசி நேரத்தில் பாஜகவில் சேர்ந்த நிலையில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 35% பெண்களுக்கு பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. ஹைதராபாத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் எ இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சியும் ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால், அது மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சி என்பதால், அதன் அதிகாரப்பூர்வ சின்னமான பட்டம் இங்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.