

எம்.பி. சஞ்சய் ராவத்
மும்பை: மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் மும்பை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக 89 வார்டுகளிலும், சிவசேனா (ஷிண்டே அணி) 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. ஆளும் கட்சியில் உள்ள இந்த கூட்டணிக்கு மேயர் பதவியை கைப்பற்றும் பெரும்பான்மை உள்ளது. ஆனால் மேயர் பதவியை யார் பெறுவது என்பதில் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தனது கட்சியின் 29 கவுன்சிலர்களை மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏக்நாத் ஷிண்டே தங்கவைத்துள்ளார்.
இதுகுறித்து சிவசேனா (உத்தவ் அணி) மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது: ஷிண்டே ஏற்கெனவே தனது கட்சி கவுன்சிலர்களை 5 நட்சத்திர விடுதியில் சிறை வைத்துள்ளார். இதேபோல் தங்கள் கட்சி கவுன்சிலர்களையும் பாதுகாப்பான இடத்தில் வைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. யார் யாரைக் கண்டு பயப்படுகிறார்கள்? நீங்கள் தான் ஆளும் கூட்டணி அரசு. இது கேலிக்கூத்தாக உள்ளது.
மும்பை மாநகராட்சியில் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோமா என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. அரசியலில் நடைபெறும் மாற்றங்களை ரசித்து கொண்டிருக்கிறோம். மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றதால், உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்ற முதல்வர் தேவேந்திர பட்னவிஸுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் பிரதமராகவுள்ளது போல் பெருமிதத்துடன் செல்கிறார். கல்யான் -டோம்பிவிலி நகராட்சியில் பாஜக உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க ஏக்நாத் ஷிண்டே முயற்சித்தார். அதுபோல மும்பையிலும் அவர் முயற்சிக்கலாம்.இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.
குலுக்கலில் மேயர்கள் தேர்வு: மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு 22-ம் தேதி குலுக்கல் முறையில் முடிவு செய்து கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்வதற்கான உத்தரவை மகாராஷ்டிராவின் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ளது.
இந்த குலுக்கல் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. சுழற்சி முறையிலான இடஒதுக்கீடு அடிப்படையில் மேயர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்யவுள்ளனர். முதலில் குலுக்கல் முறையில் பொதுப் பிரிவு, பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி என பிரிவுகள் தீர்மானிக்கப்படும். தகுதியான வேட்பாளர் மனு தாக்கல் செய்த பின் மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்வர். அவையின் மொத்த பலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஓட்டுக்களை பெறும் வேட்பாளர் மேயராக தேர்வு செய்யப்படுவார்.
மும்பைக்கு மகாயுதி மேயர்: மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று அளித்த பேட்டியில், "உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக சிவசேனா எந்த முடிவையும் எடுக்காது. சிவசேனாவும், பாஜக.,வும் கூட்டணியாக போட்டியிட்டன. அதனால் மகாயுதி கூட்டணி வேட்பாளர் மேயராக தேர்வு செய்யப்படுவார். தானே, கல்யாண் -டோம்பிவிலி, உல்காஷ்நகர் மற்றும் இதர நகராட்சிகளிலும் நாங்கள் இணைந்தே போட்டியிட்டோம். அங்கேயும் இதே முடிவுதான் பின்பற்றப்படும்" என்றார்.