கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இடம்: கொச்சி| நாள்: 04.06.2026

இடம்: கொச்சி| நாள்: 04.06.2026

Updated on
1 min read

புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று (ஜூன் 4) தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் அதிகரித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் கூறி இருந்தது. இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4) தொடங்கியுள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பது வெயிலின் தாக்கத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் இன்று தொடங்கியுள்ள தென்மேற்குப் பருவமழை, வழக்கம்போல் பல கட்டங்களாக வடக்கு நோக்கி நகர்ந்து ஜூலை 15 தேதிக்குள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையை அளிக்கும்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய பொருளாதாரத்துக்கு பருவமழை மிகவும் முக்கியம் என்பதால் இதன் வருகை உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. வேளாண் அமைச்சக தகவல்களின்படி நாட்டின் சாகுபடி நிலங்களில் கிட்டத்தட்ட 51% மழை நீரை நம்பியுள்ளன. நாட்டின் விவசாய உற்பத்தியில் 40% பங்களிப்பை இது வழங்குகிறது. நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் வாழ்வாதாரத்துக்காக விவசாயத்தை சார்ந்துள்ளதால் கிராமப்புற வருமானம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு பருவமழை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

3 நாட்கள் தாமதம்:

தென்மேற்கு பருவமழை, வழக்கமாக தொடங்கும் நாளில் இருந்து 3 நாட்கள் தாமதமாக தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு பசுபிக் பெருங்கடலில் உருவாகி வரும் ஒரு புயல், லட்சத்தீவுக்கு அருகில் உள்ள ஒரு சூறாவளியின் சுழற்சி ஆகியவையே தாமதத்துக்குக் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு பசுபிக் பெருங்கடலில் உருவாகி வரும் புயல், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்துச் சென்றதாகவும், இதன் காரணமாகவே பருவமழைக்கான வாய்ப்பு தள்ளிப்போனதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த சில நாட்களுக்கு கேரளா முழுவதும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தியாவின் வடமேற்கு பகுதி, மத்திய பகுதி, கிழக்குப் பகுதி, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>இடம்: கொச்சி|&nbsp;நாள்: 04.06.2026</p></div>
அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை: நயினார் நாகேந்திரன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in