இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராகிறார் மோடி

ஜவஹர்​லால் நேருவின் சாதனையை முறியடிக்கிறார்
இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராகிறார் மோடி
Updated on
2 min read

புதுடெல்லி: நாட்​டின் பிரதம​ராக முதன்​முதலில் 2014 மே 26ம் தேதி நரேந்​திர மோடி பதவி​யேற்​றார். அவர் வரும் ஜூன் 10ம் தேதி தொடர்ச்​சி​யாக 4,399 நாட்​களை பதவி​யில் நிறைவு செய்யவுள்​ளார்.

இதன் மூலம் இந்​தி​யா​வின் முதல் பொதுத் தேர்​தலுக்​குப் பிறகு 1952 மே 13ம் தேதி பதவி​யேற்​று, மறை​யும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்​கள் பிரதம​ராக இருந்த ஜவஹர்​லால் நேரு​வின் சாதனையை மோடி முறியடிக்க உள்​ளார். இந்த மைல்​கல் மோடியின் அரசி​யல் வாழ்க்​கை​யில் மற்​றொரு வரலாற்​றுச் சாதனை​யாகும். முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் மிக நீண்ட, தொடர்ச்​சி​யான பதவிக்​ கால சாதனையை அவர் ஏற்கெனவே கடந்த 2025 ஜூலை 25ம் முறியடித்​திருந்​தார்.

இந்​திரா காந்தி 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரை தொடர்ச்​சி​யாக 4,077 நாட்​கள் பிரதம​ராகப் பணி​யாற்​றி​னார். சுதந்​திரத்​திற்கு பிந்​தைய தொடக்க ஆண்​டு​களில் நாட்டை நேரு வழி நடத்​தி​ய​போது, இந்​தி​யா​வின் மக்​கள் தொகை சுமார் 34 கோடி​யாக இருந்​தது. 2014-ல் மோடி பதவி​யேற்​ற​போது மக்​கள் தொகை 131 கோடியை தாண்​டியது. தற்​போது அது 146 கோடிக்கும் அதி​க​மாக உயர்ந்​துள்​ளது.

1951- 52ல் நாட்​டின் முதல் பொதுத் தேர்​தலில் 53 அரசி​யல் கட்​சிகள் போட்​டி​யிட்ட நிலை​யில், இந்த எண்​ணிக்கை 2014ல் 464 ஆக உயர்ந்​து, 2024 மக்​கள​வைத் தேர்​தலில் 744ஐ எட்​டியது. முதல் பொதுத் தேர்​தலில் வாக்​காளர் எண்​ணிக்கை சுமார் 17 கோடி​யாக இருந்த நிலை​யில் இது 2014-க்​குள் 83 கோடிக்​கும் அதி​க​மாக வளர்ந்​திருந்​தது.

இரு காலக் ​கட்​டங்​களின் அரசி​யல் சூழ்​நிலைகளும் முற்​றி​லும் மாறு​ பட்​ட​வை​யாக உள்​ளன. 1952 தேர்​தலில் மொத்​தம் உள்ள 489 மக்​களவை தொகு​தி​களில் காங்​கிரஸ் மட்​டும் 364 இடங்​களை வென்​றிருந்​தது. இதற்கு நேர்​மாறாக, மோடி வலு​வான மாநிலக் கட்​சிகள் மற்​றும் கூட்​டணி கட்​சிகளு​டன் கடுமை​யான போட்டி நிறைந்த அரசி​யல் சூழலுக்கு இடையே ஆட்சி செய்​துள்​ளார்.

மேலும் தொடர்ச்​சி​யாக 2 முறை முழு பெரும்​பான்​மை​யுடன் ஆட்சிக் ​காலத்தை நிறைவு செய்த முதல் காங்​கிரஸ் அல்​லாத பிரதமர் என்ற பெரு​மையை பெற்​றுள்​ளார். மேலும் நேரு​வுக்​குப் பிறகு பதவி​யில் இருக்​கும் ​போதே தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்​தல்​களில் வெற்றி பெற்ற முதல் பிரதமரும் இவரே ஆவார்.

மோடி​யின் பதவிக்​ காலத்​தில், இந்​தி​யா​வில் உயர்​கல்வி மற்​றும் மருத்​து​வக் கல்வி நிறு​வனங்​கள் கணிச​மாக விரிவடைந்​துள்​ளன. 2014 மற்​றும் 2026-க்கு இடைப்​ பட்ட காலத்​தில் ஐஐடி-களின் எண்ணிக்கை 16-ல் இருந்து 23 ஆகவும், ஐஐஎம்​-களின் எண்ணிக்கை 13ல் இருந்து 21 ஆகவும், எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 23 ஆகவும் அதிகரித்​துள்​ளன.

ஆட்சி நடத்​தும் சூழலும் மிகப்​பெரிய மாற்​றத்​துக்கு உள்ளாகியிருக்​கிறது. தனி​யார் தொலைக்​காட்சி சேனல்​கள், சமூக ஊடகங்​கள் அல்​லது உடனடி டிஜிட்​டல் தகவல் தொடர்​பு​கள் இல்​லாத ஒரு காலத்​தில் நேரு ஆட்சி செய்​தார். ஆனால் மோடியின் பதவிக் ​காலமோ, 24 மணி நேர​மும் இயங்​கும் தொலைக்காட்சி, டிஜிட்​டல் தளங்​கள் மற்​றும் சமூக ஊடகப் பயனர்​களின் கண்காணிப்​பின் கீழ் நகர்​கிறது.

இந்த ஆண்டு தொடக்​கத்​தில், குஜ​ராத் முதல்​வர் மற்​றும் நாட்​டின் பிரதமர் என மோடி​யின் மொத்த பதவிக் ​காலம் 8,930 நாட்​களை தாண்​டிய​போது, இந்​தி​யா​வின் மிக நீண்ட காலம் மக்​களால் தேர்ந்தெடுக்​கப்​பட்ட அரசுத் தலை​வர் என்ற பெரு​மையை அவர் பெற்​றார்.

வரும் ஜூன் 10ம் தேதி 4,399 நாட்​கள் பதவிக் காலத்தை அவர் கடக்​கும்​போது, 60 ஆண்​டு​களுக்​கும் மேலாக முறியடிக்கப்படாமல் இருந்த சாதனையை முறியடித்​து, இந்தியாவின் வரலாற்​றிலேயே தொடர்ச்​சி​யாக மிக நீண்ட காலம் மக்​களாட்சி முறை​யில்​ தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட பிரதம​ராக மோடி அதி​காரப்​பூர்​வ​மாக உருவெடுப்​பார்​.

இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராகிறார் மோடி
ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது: 2016 தேர்தலில் அப்பாவு வெற்றி பெற்றதாக ஐகோர்ட் தீர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in