‘‘கும்பல் ஆட்சி நீடிக்கக் கூடாது’’ - வங்கதேச வன்முறைக்கு சசி தரூர் கண்டனம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

பாட்னா: வங்கதேசத்தில் தற்போது இருப்பது போன்ற கும்பல் ஆட்சி நீடிக்கக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘இதுபோன்ற கும்பல் ஆட்சி நிலவக் கூடாது. இந்தியா, வங்கதேசத்துடன் நல்லுறவை விரும்புகிறது என்பதையும், அங்கு அமைதி பேணப்பட வேண்டும் என்பதையும் நாடாளுமன்ற நிலைக்குழுவும் கூறியுள்ளது.

வங்கதேசத்தில் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அங்குள்ள நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற நிலை இரு நாடுகளுக்கும் நல்லதல்ல. அங்கு அமைதி நிலவ வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கும் சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘வங்கதேசம் முழுவதும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. கொடூர குற்றவாளிகளின் கைகளால் ஏழை இந்து இளைஞர் உயிரிழந்ததற்கு நான் துக்கப்படுகிறேன். அதே வேளையில், இவ்விஷயத்தில் வங்கதேச அரசு விடுத்துள்ள கண்டனத்தைப் பாராட்டுகிறேன்.

கொலையாளிகளைத் தண்டிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘‘மைமன்சிங் மாவட்டம் பலுகாவில் 27 வயது சனாதன இந்து தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ராப்பிட் ஆக்ஷன் பட்டாலியன் (ஆர்ஏபி) படையினர், சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்துள்ளனர். ஆர்ஏபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லிமோன் சர்க்கார் (19), தாரிக் ஹொசைன் (19), மாணிக் மியா (20), எர்ஷாத் அலி (39), நிஜும் உத்தின் (20), அலோம்கிர் ஹொசைன் (38), மிராஜ் ஹொசைன் அகோன் (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ஏபி பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டைகளை நடத்தி மேற்கூறிய சந்தேக நபர்களை கைது செய்துள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
‘‘100 நாள் வேலை திட்டத்தை புல்டோசரால் இடித்து தள்ளியது மோடி அரசு’’ - சோனியா காந்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in