

புது டெல்லி: “எல்பிஜி விநியோக நிலவரம் கவலைக்குரியதாக இருந்தாலும், இந்தியா முழுவதும் எல்பிஜி விநியோகத்தில் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் நாட்டில் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது” என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய சுஜாதா சர்மா, “நாட்டில் போதுமான அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும், அதிக திறனுடன் இயங்குகின்றன. நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்-களும் வழக்கம் போல் இயங்குகின்றன. எங்கும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதாக அறிக்கை எதுவும் பதிவாகவில்லை. உள்நாட்டு நுகர்வோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, தடையற்ற எல்பிஜி விநியோகத்தை அரசு உறுதி செய்யும்” என்றார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கொடியுடன் வந்த எல்பிஜி கேரியர் ஷிவாலிக் விரைவில் முந்த்ரா துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சின்ஹா கூறுகையில், “பாரசீக வளைகுடாவிலிருந்து புறப்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்தியாவை நோக்கி வந்த ஷிவாலிக் எல்பிஜி கேரியர் இன்று மாலை 5 மணியளவில், முந்த்ரா துறைமுகத்தை அடையும். மேலும் அது வருவதற்கு முன்பு, ஆவணங்கள், முன்னுரிமை நிறுத்துமிடம் மற்றும் அனைத்தும் துறைமுகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தக் கப்பல் சரக்குகளை வெளியேற்றுவதில் எந்த தாமதமும் ஏற்படாது.
பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் எந்த சம்பவமும் பதிவாகவில்லை, மேலும் நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சனிக்கிழமை அறிவிக்கப்பட்டபடி 611 இந்திய மாலுமிகளுடன் 22 இந்தியக் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கில் உள்ளன” என்றார்.
மார்ச் 14 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சுமார் 81,000 டன் முர்பன் கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட இந்தியக் கப்பல் ‘ஜக் லாட்கி’ இந்தியாவுக்கு பாதுகாப்பாக வந்து கொண்டிருக்கிறது என்றும், நாளை முந்த்ரா துறைமுகத்தை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.