

உள்படம்: ஜாகீர் நாயக்
புதுடெல்லி: இஸ்லாமிய மத போதகரான ஜாகீர் நாயக்கின் ‘இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை’ அமைப்பு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
ஜாகீர் நாயக்கின் ‘இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை’ அமைப்புக்கான தடையை மத்திய அரசு மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது. கடந்த 2016-ல் இந்த அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது.
இது குறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது: இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை அமைப்பை இந்தியாவில் தடை செய்யாமல் போனால் நாட்டில் நாசகார பணிகளை அந்த அமைப்பு செய்யும். தலைமறைவாக உள்ள அமைப்பின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, நாட்டு மக்களின் நெஞ்சில் நஞ்சை வித்திடும். அதன் ஊடாக மத நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற நிலையை சீர்குலைக்கும்.
தேசவிரோதக் கருத்துகளைப் பரப்பும், தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும், நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஜாகீர் நாயக்?
ஜாகீர் நாயக், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தவர். புனித பீட்டர் பள்ளியிலும் கிஷின்சந்த் செல்லாராம் கல்லூரியிலும் படித்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை படித்தார். ஆனால், மருத்துவத் தொழிலைவிட, மார்க்கப் பணிகளில் அவர் அதிக ஆர்வம் காட்டினார்.
1991-ம் ஆண்டு ‘தாவா’ என்ற மதப்பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தாவா என்பது இஸ்லாமிய மதத்தை பிறரை தழுவச் செய்யும் பணி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை மையம் ஒன்றையும் தொடங்கி, அதை அவரே வழிநடத்திச் சென்றார்.
ஆனால், அவரது பிரச்சாரங்கள் வெறுப்பை தூண்டுவதாக, பிரிவினையை ஊக்குவிப்பதாக, தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக உள்ளது என தகவல் வெளியானது. இந்நிலையில், அவரது இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளையை சட்டவிரோத அமைப்பாக 2016-ல் மத்திய அரசு அறிவித்தது.
இந்த தடை அமலுக்கு வந்த பின்னர் 2017-ல் ஜாகீர் நாயக் மலேசியாவிற்கு சென்றார். அதன்பின்னர் அவர் இந்தியா திரும்பவே இல்லை. இந்தியா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.