ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் ஈரானுக்கு ஆதரவாக தீவிரமாகப் பேசக்கூடியவர்களை கண்காணிக்குமாறும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்க படைகள் தாக்குதலை தொடங்கியதை அடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தின் தாக்கத்தால் இந்தியாவில் வன்முறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப். 28-ம் தேதி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியது. வன்முறையை தூண்டக்கூடிய கருத்துகளை வெளியிடும் ஈரான் ஆதரவு தீவிர பேச்சாளர்களை நெருக்கமாக கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தீவிரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய சமூக ஊடக கணக்குகளை கண்காணித்து, வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள அமைச்சகம், சர்வதேச விவகாரங்கள் உள்நாட்டில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது. அதற்கேற்ப மாநிலங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அந்தந்த மாநில எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் மற்றும் பிற தூதரக அலுவலகங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுடன் தொடர்புடைய பிற நிறுவனங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தனர்.

அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததை அடுத்து, காஷ்மீர் நாட்டின் பல பகுதிகளில் ஷியா பிரிவினர் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், இந்த அறிவுறுத்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
காமேனி மரணமும் தாக்கமும்: ஈரானில் ஒருபக்கம் துக்கம், மறுபக்கம் கொண்டாட்டம் ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in