

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மெகா காட்டாட்சி அகற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம், தேஹர்பூரில் நேற்று அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு சிறப்பு விமானத்தில் சென்றார்.
அங்கிருந்து தேஹர்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து கொல்கத்தா விமான நிலையத்துக்கு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து காணொலி வாயிலாக தேஹர்பூர் அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வளர்ச்சிக்கு ஆதரவாகவும் காட்டாட்சிக்கு எதிராகவும் மக்கள் வாக்களித்தனர். பிஹார் தேர்தல் வெற்றி மூலம் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கான வெற்றி வாசல் திறந்திருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக இடதுசாரி முன்னணி, திரிபுராவின் வளர்ச்சியை தடுத்தது. தற்போது பாஜக ஆட்சியில் அந்த மாநிலம் அதிவேகமாக முன்னேறி வருகிறது. பொருளாதார ரீதியாக மேற்கு வங்கத்தைவிட திரிபுரா வேகமாக வளர்கிறது.
திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்கத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் வியாபித்து பரவி உள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. திரிணமூல் காங்கிரஸ் என்னையும், பாஜகவையும் எதிர்க்க விரும்பினால் முழு பலத்துடன் எதிர்க்கலாம். ஆனால் மேற்குவங்கத்தின் வளர்ச்சியை ஏன் தடுக்க வேண்டும்?
தற்போது மேற்கு வங்கத்தை ஊடுருவல்காரர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. ஊடுருவல்காரர்களை வெளியேற்ற ஒவ்வொரு தெருக்களிலும் விழிப்புணர்வு பதாகைகளை நிறுவ வேண்டும்.
மேற்குவங்கமும், வங்க மொழியும் நாட்டின் கலாச்சாரத்தை செழுமைப்படுத்தி வருகின்றன. உதாரணமாக வங்க மொழியில் எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடலை குறிப்பிடலாம். இந்த பாடலின் 150-வது ஆண்டு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேற்கு வங்கத்தில் மெகா காட்டாட்சி நடைபெறுகிறது. இந்த காட்டாட்சியை அகற்றுவோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரட்டை இன்ஜின் அரசு பதவியேற்க மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் பரஜகுலி - கிருஷ்ணாநகர் தேசிய நெடுஞ்சாலையில் 66.7 கிமீ தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பாராசத் – பரஜகுலி தேசிய நெடுஞ்சாலையில் 17.6 கிமீ தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இரு திட்டங்களின் மதிப்பு ரூ.3,200 கோடி ஆகும். தேஹர்பூர் அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்க முடியாத நிலையில் ஆளுநர் ஆனந்த போஸ் இந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அசாமில் புதிய முனையம் திறப்பு: அசாமின் குவாஹாட்டியில் லோகபிரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. அங்கு ரூ.4,000 கோடி செலவில் புதிய முனையம் கட்டப்பட்டு உள்ளது.
கொல்கத்தாவில் இருந்து நேற்று பிற்பகல் குவாஹாட்டி சென்ற பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். அங்கு நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:
இரட்டை இன்ஜின் அரசால் அசாம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அசாமும் வடகிழக்கு மாநிலங்களும் புறக்கணிக்கப்பட்டன. மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் அசாமில் அரசு வேலை பெற லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது. இப்போது ஊழல், லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்பட்டு உள்ளது.
குவாஹாட்டி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த புதிய முனையம் அதிநவீன தொழில்நுட்பத்தால் மூங்கில்களால் கட்டப்பட்டு உள்ளது. இதன்மூலம் அழகும் வலிமையும் ஒருமித்து சங்கமித்து உள்ளன. கிழக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக அசாம் உருவெடுத்திருக்கிறது. வடகிழக்கு முழுவதும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. குவாஹாட்டி-ஜல்பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அசாமில் ரூ.10,600 கோடி செலவில் அமோனியா- யூரியா தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.