

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: தற்போது ஒரு அரசியல் கட்சியையும், மாநில அரசையும் ஒருசேர வழிநடத்தும் ஒரே பெண் தலைவர் மம்தா பானர்ஜி மட்டுமே. அவர் முற்றிலும் சுயம்புவாக உயர்ந்த முதலாம் தலைமுறைத் தலைவர்.
கடந்த காலங்களில் சோனியா காந்தி - மன்மோகன் சிங் இடையேயான அரசியல் கூட்டணி வெற்றிகரமாக இருந்தது. ஆனால், தற்போது ராகுல் காந்தி - மல்லிகார்ஜுன கார்கே கூட்டணி, வலிமை வாய்ந்த தலைவரான நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த எந்த வகையிலும் உதவவில்லை.
இந்நிலையில், மம்தா எதிர்க்கட்சி கூட்டணிக்குத் தலைமையேற்றால், அது பாஜகவின் பெண்கள் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திரா காந்திக்குப் பிறகு ஒரு பெண் பிரதமர் தலைமையேற்பதற்கான காலம் இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்பி சகரிகா கோஷ், “இது காலத்தின் கட்டாயம்” என பதிவிட்டுள்ளார்.